எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம். கட்சியின் தலைவரல்லாத வேறு எவருக்கும் நாங்கள் பதில்சொல்லவேண்டிய தேவையில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
சமஷ்டித் தீர்வுப் பண்புகளை ஒற்றையாட்சிக்குள்ளே பெறுவதைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்கவேண்டுமெனவும், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும் அண்மையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான்பெரேரோ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு, வடகிழக்கு இணைப்பு என்ற விவகாரங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் எமது உறுதியான நிலைப்பாட்டை தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறியுள்ளோம். எமது உறுதியான நிலைப்பாடு பற்றி அவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். ஒவ்வொருவருடைய அபிப்பிராயங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை.

