2 லாரிகளில் கொண்டு சென்ற 3,520 குக்கர்கள் பறிமுதல்

198 0

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து 2 லாரிகளில் கொண்டு சென்ற 3,520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும்படை அதிகாரி சரவணன் தலைமையில் அதிகாரிகள் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி சமத்துவபுரம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சென்னை கும்மிடிபூண்டியில் இருந்து தஞ்சைக்கு சென்ற 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு லாரி டிரைவர் வெறும் காலி அட்டைப்பெட்டிகளை எடுத்து செல்வதாக கூறி அதிகாரிகள் ஏமாற்றி லாரியை எடுத்து சென்றுள்ளார். மற்றொரு லாரியை மறித்து விசாரணை மேற்கொண்டதில் அதில் குக்கர்கள் இருப்பதும், அதில் தஞ்சை மாவட்ட அ.ம.மு.க.வினர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா என ஜெயலலிதா படம் மற்றும் டி.டி.வி. தினகரன் உருவப்படம் போட்டு கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக லாரியையும், குக்கர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி சென்ற மற்றொரு லாரியை திருமானூர் கொள்ளிடம் பாலம் சோதனை சாவடிக்கு தொடர்பு கொண்டு லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். தப்பிச்சென்ற லாரி திருமானூர் சோதனை சாவடியில் பிடிக்கப்பட்டு அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து 2 லாரிகளையும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 2 லாரிகளிலும் ரூ.12 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 520 குக்கர்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த குக்கர்கள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என அரியலூர் சட்டமன்ற தேர்தல் அலுவலர் ஏழுமலை விசாரணை நடத்தி வருகிறார்.