தி.மு.க.வுக்கு ஸ்டாலின் முடிவுரை எழுதி கொண்டிருக்கிறார்- நத்தம் விசுவநாதன் பேச்சு

199 0

தி.மு.க.விற்கு ஸ்டாலின் முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று சின்னாளபட்டியில் நடந்த ஜெயலலிதா பிறந்த தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் சின்னாளபட்டியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கினார். சின்னாளபட்டி நகரச் செயலாளர் சக்கரபாணி வரவேற்றார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் விஜயபாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கிரசர் பாலு, மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் மருதராஜ் பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் ஆர்.விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக ஆத்தூர் தொகுதியில் வளர்ச்சி பணிகளே செய்யாமல் இ.பெரியசாமி காலத்தை ஓட்டிவிட்டார். ஆத்தூர் தொகுதியில் ஒரு மாற்றத்தை மக்கள் கொடுத்தால் நாங்கள் ஏற்றத்தை கொடுப்போம்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் நான் உள்ளேன். எங்கள் குழுவில் கவர்ச்சி மற்றும் வெற்று அறிவிப்புகளை அறிக்கையில் இடம் பெறாமல், மக்களுக்கு தேவையான திட்டங்களை மட்டும் அறிக்கையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக அறிக்கை தயாரித்து வருகிறோம்.

தற்போது ஸ்டாலின் ராசியில்லாதவர் என மக்கள் பேச தொடங்கி விட்டனர். தி.மு.க என்ற கட்சிக்கு அண்ணாதுரை முன்னுரை எழுதினார். கருணாநிதி விளக்க உரை எழுதினார். ஸ்டாலின் முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அருளானந்தம், மாவட்ட மீனவரணி இணை செயலாளர் அந்தோணிசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜலட்சுமி சந்தானகிருஷ்ணன், தேன்மொழி பாலாஜி, வெண்ணிலா அருள், நகர பொருளாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். முடிவில் சின்னாளபட்டி முன்னாள் நகர செயலாளர் கணேஷ் பிரபு நன்றி கூறினார்.