ஹைதி நாட்டில் சிறையில் கைதிகள் கலவரம் : 25 பேர் பலி – 200 கைதிகள் தப்பி ஓட்டம்

218 0

ஹைதி நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறை அதிகாரி மற்றும் 6 கைதிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் 1500க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல கூலிப்படை தலைவன் அர்னல் ஜோசப் என்ற கைதியும் அவரது கூட்டாளிகளும் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.‌ அவர்கள் சிறை அதிகாரி மற்றும் சிறைகாவலர்களை சரமாரியாக தாக்கியதோடு துப்பாக்கியாலும் சுட்டனர்.

இந்த கலவரத்தில் சிறை அதிகாரி மற்றும் 6 கைதிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அர்னல் ஜோசப் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடினர்.

செல்லும் வழியில் அவர்கள் சிறைக்கு அருகே உள்ள கடைகளில் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதற்கிடையில் கலவரம் நடந்த சிறைக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தி சிறை முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்னர் தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.‌

இதனிடையே கூலிப்படை தலைவன் அர்னல் ஜோசப் மோட்டார் சைக்கிளில் சென்றபோது போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்தார். எனவே போலீசார் அவரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.‌ சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் இதுவரை 40 பேர் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறைகளில் அடைக்கப்பட்டதாகவும், எஞ்சிய கைதிகளை பிடிப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌