மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம்

429 0

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனில் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பேரவையின் 46ஆவது மனித உரிமைகள் கூடடத் தொடரில், பிரிட்டனால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல், சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை லண்டனில் ஆரம்பமாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் ‘அம்பிக்கை செல்வகுமார்’ என்ற பெண்மணியே இந்தப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கின்றார்.

சர்வதேச இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்காடு மையத்தின் பணிப்பாளராக அம்பிகை பணியாற்றுகின்றார். அத்துடன், தொடர்ச்சியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார்.

தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று கோரிக்கைகளில் ஒன்றாவது
நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் அவர், அதற்கான
சாத்தியங்கள் உள்ளன என்ற நம்பிக்கையுடனேயே இந்தப் போராட்டத்தை தான்
ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.