பெரும்பான்மை மக்களுக்கு எதிராக நான் ஒருபோதும் சட்டங்களை இயற்றமாட்டேன் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் நீதி அமைச்சர் அலிசப்ரி மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துத் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தினதேரரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் தெரிவிக்கும் வகையிலேயே நான் அன்று கருத்து தெரிவித்திருந்தேன். இதன்போது ரத்தினதேரர் ‘ஒரே நாடு -ஒரே சட்டம் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரசாரமாகும்’ என்று குறிப்பிட்டார்.
அத்துடன், தனியார் சட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் முகமாகவே தனியார் சட்டங்கள் என்பது முஸ்லீம் இனத்துடன் மாத்திரம் தெராடர்புக்கொண்டதல்ல. நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் தனித்தனியான சட்டங்கள் உள்ளன. அவை அனைத்தையும் மாற்றி அமைப்பது என்றால் அதுதொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று அவருக்கான பதிலை வழங்கியிருந்தேன்.
இத்தகைய கருத்தை தெரிவித்ததாக என்னை பலரும் விமர்சித்திருந்தனர். சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக என்னால் சட்டங்கள் உருவாக்க முடியாது.அவ்வாறான எண்ணத்தில் எந்தவித கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பாக பௌத்த மத தலைவர்களுக்கு பலமுறை தெளிவுப்படுத்தியுள்ளேன். இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தவும் நான் தயாராகவே உள்ளேன். எந்தவொரு சட்டத்தை உருவாக்குவதென்றாலும் அதுத் தொடர்பில் அமைச்சரவையில் அனுமதிப் பெறவேண்டியது கட்டாயமாகும்.
இந்நிலையில் முஸ்லிம் சட்டவிதிகள் சிலவற்றில் திருத்தம் மேற்கொள்ள நாம் அமைச்சரவையில் அனுமதி பெற்றுக்கொண்டுள்ளோம். அதற்கமைய முஸ்லிம் ஆண்களுக்கு நிகரான முஸ்லிம் பெண்களுக்கு சமவுரிமை வழங்கல், 18 வயதுக்கு பின்னரே முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்யவேண்டும், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணியகூடாது போன்ற திருத்தங்கள் அதில் உள்ளடங்குகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

