யாழ். முதல்வர் -அமெரிக்க தூதுவர் சந்திப்பு

248 0

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸிற்கும் யாழ்மாநகர முதல்வர் வி மணிவண்ணணிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் யாழ்மாநகர முதல்வர் தெரிவித்துள்ளதாவது

இச் சந்திப்பின் போது ஜெனிவா தீர்மானங்களுக்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது ஆனால் அவர்கள் அதை முன்னெடுக்கவில்லை. தற்போதைய புதிய அரசாங்கம் அனைத்து தீர்மானங்களில் இருந்தும் வெளியேறியிருக்கின்றது.

எனவே எங்களுடைய அரசியல் உரிமை தொடர்பான பிரச்சனைகள் தொடர்பிலும் எமது மக்கள் அனுபவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகள் நில அபகரிப்புக்கள் மற்றும் குருந்தூர் மலைஇ வெடுக்குநாரி கோவில்களை அபகரிக்கின்ற செயற்பாடுகள் தொடர்பிலும் அமெரிக்கா அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களையும் நடவடிக்கைகளையும் ஐநா ஊடாக பல மட்டங்களில் முன்னெடுக்கவேண்டும் என்றும் மாநகர முதல்வர் அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீ இடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் எங்களுடைய மண்ணில் ஒரு இனஅழிப்பு நடைபெற்றது என்பதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடம் இல்லை. எனவே இதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று ;அநீதி இழைக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் கேட்டார்.

அண்மையில் தங்களுடைய பிரச்சனைகளை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டுவாற்கு தமிழ்மக்களால் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட பேரணியினை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாகவும் அதனை எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது தொடர்பிலும் அமெரிக்கத் தூதுவருக்கு முதல்வர் தெளிவுபடுத்தினார்.
இன்றைய சந்திப்பு மகிழ்ச்சி தருவதாகவும் எங்களுடைய மக்கள் உங்கள் நாடு உட்பட பல நாடுகளில் பெருமளவில் வாழ்கின்றனர். அந்த மக்கள் சார்பாகவும் எங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அமெரிக்கா அரசாங்கம் உதவ வேண்டும் என்பதனை இதயபூர்வமாக கேட்டுக்கொள்ளுகின்றேன் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அமெரிக்க கோணர் நூலகப் பகுதி ஒன்றினை நிறுவ வேண்டும் என்றும் யாழ்.மாநகரசபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தான் கரிசனை செலுத்துவதாக அமெரிக்கத் தூதர் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீடனான இச் சந்திப்பில் யாழ்.மாநகர முதல்வர்இ யாழ்.மாநகர சபை ஆணையாளர்இ யாழ்.பொது நூலக பிரதம நூலகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.