மைத்திரிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

171 0

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில் இந்த தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்தும் நேற்றைய தினம் இந்த அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடமும் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் அறிக்கையில் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்திய நிலையில் இன்றைய தினம் அதற்கான ஏற்பாடுகள் செய்வதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் இந்த அறிக்கையில் பிரதான குற்றவாளிகளை தண்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றை தடைசெய்யவும் சட்டமா அதிபர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

அதேபோல் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான செயற்பாடுகளை கவனிக்காது விட்டமை அல்லது பொறுப்பற்ற செயற்பாடுகள் மற்றும் தவறுகளுக்காக முன்னாள் ஜனாதிபதியின் தரப்பில் பொறுப்புள்ளது என ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இந்த தவறுகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் ஆராய வேண்டும் என்பதை ஆணைக்குழு அடையாளப்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட முன்னர் ஏப்ரல் 4 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் இந்தியாவின் புலனாய்வுத்தகவல் எஸ்.ஐ.எஸ் அதிகாரி நிலந்த ஜெயவர்தனவிற்கு கிடைத்தும் அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்காமை அல்லது இருவரும் கவனத்தில் கொள்ளதமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 16ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையில் வெளிநாட்டு பயணமொன்றை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த காலத்திற்காக பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை அல்லது பாதுகாப்பு விடயங்களுக்கு பொறுப்பான ஒருவரை நியமிக்காது சென்றமை பலவீனத்தனை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.