யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் உட்பட நால்வருக்கு கொவிட்-19

253 0

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றுத் திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது எனவும் இவர்களில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 423 பேரின்
மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று
உறுதி செய்யப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வலைப்பாடு கிராமத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

மன்னார் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்றுள்ளமையும் நேற்றைய பி சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் ஏற்கனவே, தொற்றுள்ளவர்களுடன் நேரடித் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 329 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றார்.