மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவிலில் கிடாய் வெட்டி சிறப்பு பூஜை செய்த எம்எல்ஏ

18 0

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவிலில் 14 கிடாய் வெட்டி எம்.எல்.ஏ. நாகராஜன் சிறப்பு பூஜை செய்தார்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டியும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நாகராஜன், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் 14 கிடாய் வெட்டி சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நாகராஜன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக மக்களுக்கான திட்டத்தை துரிதமாக செயல்படுத்துகின்றனர். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளாலும், காவிரி, வைகை, குண்டாறு திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் என மக்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருவதால், வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பூஜை செய்துள்ளேன். இந்த கோவிலில் வேண்டினால் நினைத்தது நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருப்புவனம் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.கே. கணேசன், சோனைரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.