14-வது முறையாக முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு இன்று ஆய்வு

197 0

பெரியாறு அணையில் மத்திய நீர் வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆண்டுதோறும் அணையை பார்வையிட்டு பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறது. இக்குழுவுக்கு துணையாக 5 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் 3 மாதத்துக்கு ஒரு முறை அணையின் நீர்மட்டம், இருப்பு, நீர் கசிவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து மூவர் குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.

மூவர் குழுவின் தலைவராக மத்திய நீர் வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக அரசு பிரதிநிதியாக பொதுப்பணித்துறை செயலர் மணிவாசகன், கேரள அரசு பிரதிநிதியாக நீர்வள ஆதார அமைப்பு செயலாளர் ஜோஸ் ஆகியோர் உள்ளனர்.

இக்குழுவினர் இன்று அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது தமிழக மற்றும் கேரள அதிகாரிகளும் உடன் சென்றனர். கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி இக்குழுவினர் ஆய்வு நடத்திய நிலையில் தற்போது இந்த ஆண்டுக்கான ஆய்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மத்திய குழு இன்று 14-வது முறையாக ஆய்வை மேற்கொள்கின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 2000-ம் ஆண்டில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கேரள மின்வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் வகையில் பேபி அணையை பலப்படுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் தேக்கடி ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக அரசுக்கு சொந்தமான ‘‘தமிழ் அன்னை’’ படகை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.

வல்லக்கடவு பாதையை சீரமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே இந்த கோரிக்கைகள் மூவர் குழு ஆய்வுக்கு பிறகு தமிழக பிரதிநிதிகளால் வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

முல்லைப்பெரியாறு அணை இன்று காலை நிலவரப்படி 128.80 அடியாக உள்ளது. வரத்து 109 கன அடி. திறப்பு 600 கன அடி. வைகை அணை நீர் மட்டம் 67.39 அடி. வரத்து 489 கன அடி. திறப்பு 694 கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 52.25 அடி. வரத்து 24 கன அடி. திறப்பு 80 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 121.19 அடி. வரத்து 18 கன அடி. திறப்பு 25 கன அடி.