கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையை சுகாதாரத்துறை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை

230 0

கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ள நிலையில் சுகாதாரத் துறையினர் இவ்விடயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகெங்கும் தற்போது பரவி வரும் கோவிட் வைரஸ் தொற்றால் பல நாடுகள் அச்சத்திலுள்ளன.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகிய நிலையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். அதன் பின் மேலும் பலருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்ற இத்தொழிற்சாலையில் வெளி மாவட்டங்களில் இருந்தும் பணிக்கு வருகின்ற உயர் பணியாளர்கள் தமது வீடுகளிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரையில் இந்த ஆடை தொழிற்சாலையானது சுகாதார நிலையை முறையாகப் பின்பற்றுகிறதா என்பது கேள்விக்குறியே.

அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையின் நிமித்தம் வருகை தரும் ஊழியர்கள் பற்றி எவரும் அக்கறை கொள்ளவில்லை.

இந்நிலையில் வறுமை நிலையை கருத்திற்கொண்டு தமது உயிரையும் பொருட்படுத்தாது பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பாகச் சுகாதாரத் துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.