‘வர்தா’வுக்கு அடுத்து ‘மாருதா’ – இலங்கையே பெயர் சூட்டியது

270 0

14-1481684163-cyclone455வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கோரதாண்டவமாடி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற நிலையில் அடுத்ததாக மாருதா புயல் வரவுள்ளது.

புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் 1953 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அட்லாண்டிக் கடற்பகுதியில் தான் முதலில் ஆரம்பமானது.

இதில் கரீபியன் கடல், வடக்கு மெக்ஸிகோ, வடகிழக்கு பசிபிக் பெருங்கடல், வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசிபிக், வடமேற்கு பசிபிக், தென் சீனக் கடல், அவுஸ்திரேலியா, வட இந்திய பெருங்கடல், தென் மேற்கு இந்திய பெருங்கடல் ஆகிய கடல்களைச் சார்ந்த 10 நாடுகளை இணைத்து பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

வட இந்திய பெருங்கடலில் பாகிஸ்தான், மியான்மர், இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, ஏமன், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் புயல்களுக்கு பெயர் சூட்டும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு, A,B,C என்ற அகர வரிசையில் பெயர் சூட்டப்படுகின்றன.

இதன் வரிசையில் முதலில், B என்ற வரிசையில் பங்காளதேஸ் வழங்கிய பெயர் வைக்கப்பட்டு பின் முறையாக இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஏமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து என வரிசையில் அந்தந்த நாடுகள் வழங்கிய பெயர்கள் சூட்டப்படும்.

இந்த வரிசையில் கடந்த நவம்பர் மாதம், உருவான புயலுக்கு அகர வரிசையில் நாடா என்ற பெயரை ஓமன் நாடு சூட்டியது.

நாடா என்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்ட மழைத்துளி என்று பொருள். இதனால், இந்த புயல் பெருந்தன்மை என்றும் அழைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த புயல் கடந்த வாரம் காரைக்கால் அருகே கரையை கடந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு பெயருக்கு ஏற்றாற்போல் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பெருந்தன்மையாக பரவலான மழையைக் கொடுத்துவிட்டுச் சென்றது.

இதையடுத்து, டிசம்பர் 6இல் வங்ககடலில் உருவாகி டிசம்பர் 12ஆம் திகதி கரையை கடந்து ருத்ர தாண்டவம் ஆடிய வர்தா புயலுக்கு பாகிஸ்தான் பெயர் சூட்டியது.

வர்தா என்பதற்கு அரபு மொழியில் சிவப்பு ரோஜா மலர் என்று பொருள். ஆனால், இந்த புயலானது ரோஜா மலரைப் போல் இல்லாமல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

கிட்டதட்ட 1000 கோடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பே மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில், இதற்கு அடுத்து ஒரு மிகப்பெரிய புயல் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு அகர வரிசையில் மாருதா என்ற பெயரை இலங்கை சூட்டியுள்ளது .