நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் தொண்டர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தனசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறேன். இதற்காக குன்றத்தூரில் சுமார் 53 ஏக்கர் நிலம் வாங்கினேன். அந்த இடத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியபோது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டனர். அதற்கு நான் சம்மதிக்காததால், என்னையும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களையும் மிரட்டுகின்றனர். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனருக்கும், ஆவடி துணை போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

