இன்னும் 2 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு- உதயநிதி ஸ்டாலின்

189 0

இன்னும் 2 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது என்று தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் வடமதுரை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2019-ம் ஆண்டு இந்தியா முழுவதும் மோடி அலை வீசியது. அப்போதே தமிழகத்தில் 38 தொகுதிகளில் தி.மு.க.வை வெற்றிபெற வைத்தீர்கள். இதன் மூலம் இந்தியாவே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த பெருமையை தமிழக மக்கள் ஏற்படுத்தினர்.

அதே போன்ற வெற்றியை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுக்கு வழங்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை தாங்கள் மறைத்து விட்டதாக உண்மையை சொன்னவர் அமைச்சர் சீனிவாசன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வது போல தமிழகம் வெற்றிநடைபோடவில்லை. வெற்று நடைதான் போடுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்னும் கட்டப்படாமல் உள்ளது.

சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டியில், கூவத்தூரில் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மது ஊற்றிக்கொடுத்தார் என கூறியுள்ளார். இது ஆட்சியின் அவல நிலையை காட்டுகிறது.

கருணாநிதி ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஆகியவை செயல்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தைரியசாலி. அவர் ஒன்று சொன்னால் அதில் உறுதியாக நிற்பார். அதனை செய்தும் காட்டுவார். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்காது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய போதும் தமிழகத்தில் மோடி அல்ல லேடி என சவால் விட்டு அதனை ஜெயித்தும் காட்டினார்.

ஆனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மோடிதான் எங்கள் டாடி அவர் சொல்கிறபடி நாங்கள் கேட்போம் என்று கூறுகிறார். இவர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்ப இன்னும் 2 மாதங்கள்தான் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தீர்ப்பை நீங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பழனியில் நடந்த பிரசாரத்தின் போது, உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்களால் வெள்ளி வேல் பரிசாக வழங்கப்பட்டது.