மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜெனிவா சவால்களை எதிர்கொள்வோம் -மஹிந்த ராஜபகஷ

159 0

மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டல்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபகஷ , தேசப்பற்று சட்டமூலத்தின் அவசியம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜெனிவா சவால்களை எதிர்கொள்வது குறித்து மகா சங்கத்தினருடன் பிரதமர் தலைமையிலான குழு கலந்துரையாடியது.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பாக மகா சங்கத்தினர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரரேணை தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மகா சங்கத்தினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொவிட்-19 கட்டுப்படுத்தலில் சர்வதேச மட்டத்தில் இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் , நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை உருவாக்கும் வகையில் மனித உரிமைகள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று இதன் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் வெற்றி மற்றும் இறையாண்மை என்பவற்றுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலான 16 யோசனைகள் அடங்கிய அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ளமை இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் போது பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் , இவ்வாறான நெருக்கடியான சூழலில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள தீர்மானத்தமைக்கு பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

நாட்டை பிளவுபடுத்துவதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் , தீவிரவாதிகளின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்தமையை யுத்தக்குற்றமாக்குவது பாரிய குற்றமாகும் என்றும் கூறினார்.

இதற்கு எதிராக நாம் மீளெழ வேண்டும். பாராளுமன்றத்தில் இதற்கான தேசப்பற்று சட்டமூலமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் தேரர் வலியுறுத்தினார்.

இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு பௌத்த நாடுகளுக்கு எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியும். அதன் ஊடாக சாதகமானதொரு பதில் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறினார்

இதன் போது கருத்து தெரிவித்த பெங்கமுவே நாலக தேரர் ,

மனிதாபிமான போராட்டத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை பாதுகாத்துக் கொள்ளவதோடு , சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோரின் வெளிநாட்டு கொள்கைகளை கவனத்தில் கொண்டு நாமும் செயற்பட வேண்டும் என்று கூறினார்.

மங்கள சமவீர கையெழுத்திட்ட 30(1) பிரேரணையின் அழுத்தமே இன்றும் தொடர்வதாகவும் பெங்கமுவே நாலக தேரர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இந்த யோசனைகளின் அடிப்படையில் பார்க்கும் போது , நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதித்தல் , ஏனைய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த யோசனைகளுக்கு எதிராகவும் இலங்கைக்கு சார்பாக செயற்படும் நாடுகளின் ஆதரவை அதிகரித்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமானதாகும் என்றும் கூறினார்.

விசாரணைகளை முன்னெடுத்து தீர்ப்புக்கள் வழங்கப்படுவது வழமையாக காணப்படுகின்ற போதிலும், அதற்கு மாறாக தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே தீர்மானத்தை எடுத்துள்ளமையானது நியாயமற்றது.

இந்த யோசனைகள் நியாயத்திலிருந்தும் நீதியிலிருந்தும் முற்றாக விலகியுள்ளன என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதன் அபாய நிலையானது பிரதானமான இரு காரணிகளில் தங்கியுள்ளது என்று கூறிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ,
இஸ்லாம் அடிப்படைவாதம் மற்றும் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்காமை , அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றும் நிலைக்கு தள்ளுதல் என்பன அந்த காரணிகளாகும் என்றும் கூறினார். இலங்கை கால அவகாசம் கோர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கால அவகாசம் கோரினாலும் அதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும் என்று கூறிய அமைச்சர் விமல் வீரவன்ச,

எத்தகைய விளக்கமளித்தாலும் மாற்றமடையாத நாடுகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கூறினார்.

அவ்வாறான நாடுகளின் கொள்கைககளில் மாற்றங்கள் ஏற்படாது. எனவே எமக்கு சார்பான நாடுகளின் ஆதரவை வலுப்படுத்திக் கொள்வதே தற்போது நாம் செய்ய வேண்டியதாகும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் டயஸ்போராக்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப செயற்படாத வெளிநாட்டு தூதரக சேவையை பலப்படுத்தி ஏனைய நாடுகளின் ஆதரவை பெற்றுக் கொள்வதன் மூலம் , இவ்வாறான நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியும் என்று நெதகமுவே விஜய மைத்திரி தேரர் கூறினார்.

மகா சங்கத்தினரின் யோசனைகள் , ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , நாட்டில் நெருக்கடியான எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறு மகா சங்கத்தினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதாகவும் அதன் படி செயற்படுவதாகவும் கூறினார்.