சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கூடியது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தொடங்கினார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை அடிக்கடி கமல்ஹாசன் சந்தித்தார். என்றாலும் பெரிய அளவில் கட்சி கூட்டங்கள் இதுவரை நடத்தப்படவில்லை.
இந்தநிலையில் முதன் முதலாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கூடியது. இதில் பங்கேற்பதற்காக அவர் காலை 10.30 மணியளவில் வந்தார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. செண்டை மேளம், பறை இசை முழங்க கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து கமல்ஹாசனை வரவேற்றனர்.
அழைப்பு பெற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்தனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மட்டுமே பொதுக்குழுவுக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அனைத்து மாவட்ட செயலாளர்கள் சார்பு அணிகளின் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுக்குழுவுக்கு வந்த முன்னணி நிர்வாகிகளை தவிர மற்ற நிர்வாகிகளின் செல்போன்கள் நுழைவு வாயிலிலேயே வாங்கி வைக்கப்பட்டது. அடையாள அட்டைகளை காட்டிய பிறகே பொதுக்குழு மண்டபத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மாநில துணைத்தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் மவுரியா, சந்தோஷ்பாபு, ஸ்ரீபிரியா, கமீலா நாசர், குமாரவேல், முரளி அப்பாஸ், கவிஞர் சினேகன், பொன்னுசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இந்த பொதுக்குழுவில் பங்கேற்றனர்.
இதில் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று கமல் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
அதன்படி, கமல்ஹாசனை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இன்று மதியம் வரை பொதுக்குழு கூட்டம் நடக்கிறது
மதிய உணவுக்கு பிறகு கட்சியின் 4-வது ஆண்டு தொடக்க விழாவை நடத்துவது குறித்தும், பிரசார வியூகங்களை வகுப்பது குறித்தும் சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. மாலை 6 மணிவரை நடக்கும் இந்த கூட்டத்திலும் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்.

