எஸ்.எல்.ஏ.எஸ்.பரீட்சையில் தமிழ் பேசும் எவருமே தேர்வாகவில்லை; திட்டமிட்ட புறக்கணிப்பென விசனம்

233 0

இலங்கையின் அதியுயர்ந்த சேவையாகக் கருதப்படும் (SLAS) இலங்கை நிர்வாக சேவையின்(SLAS) மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தப் பட்டியலின் படி தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகள் எவரும் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையானது திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இரு பிரிவுகளில் நடைபெறுகின்ற நிலையில் கடந்த வருடம்( 2020ஆம் ஆண்டு) தைமாதம் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெற்றிருந்தன.

203 திறந்த மற்றும் 53 மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிடங்ளுக்காக பரீட்சை நடைபெற்றிருந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியலை இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

53 பேரை தெரிவு செய்வதற்காக நேர்முகத் தேர்வுக்குத் தெரிவாகியுள்ள 69 பேருடைய பெயர், விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் பேசும் மாணவர்கள் எவரும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியலில் உள்ளடக்கப்டவில்லை என்பது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பரீட்சாத்திகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை 2017இல் நடைபெற்ற மட்டுப்படுத்தப்ட்ட பரீட்சையில் 47 பேர் தெரிவாகியிருந்த நிலையில் 17 பேர் தமிழ் பேசும் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி சித்தியடைந்ததுடன் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் சிவராஜா ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருந்தனர். ஆனால் இம்முறை வெளியாகியுள்ள பெறுபேறு களின் படி தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் எவரும் தெரிவாகவில்லை என்பது கவலையளிப்பதுடன் இதுதொடர்பில் பலத்த கேள்வியை அனைவரிடத்திலும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை 43 பேரில் 17 தமிழ் மாணவர்கள் சித்தியடைந்ததுடன் முதல் இரண்டு இடங்களையும் தமிழர்களே பெற்றிருந்தார்கள். இம்முறை தமிழ் பேசும் மாணவர்கள் எவருமே தெரிவாகாமல் போனமைக்கான காரணம் என்னவென பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

நிர்வாக சேவை திறந்த பரீட்சையிலும் கூட கடந்த முறை முதலிடத்தை தமிழ் மாணவர் ஒருவரே பெற்றிருந்ததுடன் கணக்காளர் சேவை பரீட்சைப் பெறுபேறுகளில் அதிகளவு தமிழ் மாணவர்கள் சித்தியடைந்ததாகக் குறிப்பிட்டு பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டு மீளப் பரீட்சை நடத்தப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த தமிழ் பேசும் ஒருவர் மட்டுமே இப்பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்.

இலங்கை நிர்வாக சேவை திறந்த பரீட்சை மற்றும் கணக்காளர் சேவை பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியிருப்பதனால், மேலும் வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகளிலும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுவிடுமோ என தமிழ்பேசும் பரீட்சார்த்திகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் இவ்வாறான திட்டமிட்ட புறக்கணிப்பு தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் உயரிய பதவிகளிலும் தமிழ் பேசும் கல்வி சமூகம் உருவாக வாய்ப்பே இல்லை. இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என கல்விமான்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.