தான் நலமாக இருக்க உங்களுக்கு சேவை செய்ய தனக்காக 2 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வசூர், ஏகாம்பரநல்லூரில் 2 ஊராட்சிகளில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. மக்கள் சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க முன்னாள் முதல்வர் கருணாநிதி முடிவு செய்த போது மின்சார துறை அமைச்சராக நான் இருந்த போது கையெழுத்திட்ட கரம் தான் இது.
விவசாயக்குடும்பத்தில் பிறந்த நான் 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டும் போது என் தாயின் காதில், மூக்கில், கழுத்தில் இருந்த நகையும் இல்லாமல் போகும். இதேபோல் மக்கள் எல்லோரும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீர இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
மேலும் எனது கடைசி ஆசை எனது தொகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்க வேண்டும். தமிழகத்திலேயே இல்லாத அளவுக்கு தனியார் மருத்துவமனையை விட சிறந்த மருத்துவமனையாக உருவாக்க வேண்டும். அதில் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும் என்பது எனது கடைசி ஆசை. நான் நலமாக இருக்க உங்களுக்கு சேவை செய்ய எனக்காக 2 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். (இதனை தொடர்ந்து கூட்டத்தில் 2 நிமிடங்கள் அவரது நலனுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.)
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய டி.வி. இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அ.தி.மு.க.வினர் வழங்கிய மின்விசிறி, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் ஒன்று கூட வேலை செய்யவில்லை. பேரீச்சம்பழத்திற்கு கூட உதவாமல் போனது.
வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தான் ஜெயிக்கும். தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் தான் முதல்வர். சத்தியம் செய்து சொல்கிறேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நான் நம்புகிறேன். நீங்கள் என்னை தூக்கி விட்டால் தி.மு.க. தலைவர் பக்கத்தில் 2-வது அமைச்சராக உட்கார்ந்துகொள்வேன். அவரிடம் கேட்டு 3 மாதத்தில் காவிரி தண்ணீரை கொண்டு வருவேன்.
இது நான் சவாலாக விட்டு செல்கிறேன். நான் சவால் விட்டேன் என்றால் அதை நான் செய்து முடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

