இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் – ஜீ.எல்.பீரிஸ்

283 0

download-2நாட்டுக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன் இதன் மூலம் மக்களின் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டுக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய அம்பியூலன்ஸ் சேவை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதார சேவைக்கு இந்தியா உதவும் வகையில் அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்கியிருப்பதை வரவேற்கின்றோம். இந்த அம்பியூலன்ஸ் வண்டிகளை நாட்டில் இருக்கும் வைத்தியசாலைகள் மூலம் பராமரிக்கலாம்.

இதனை இந்தியர்கள் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை. ஏனெனில் இந்த அம்பியூலன்ஸ் வண்டிகளில் இந்திய வைத்தியர்கள் தான் இருக்கின்றனர்.

உதவியாட்களும் இந்தியர்கள் தான். இவ்வாறான நிலையில் அதில் யார் சென்றாலும் எமக்கு தெரியாது. இதனால் எமது நாட்டு தகவல்களை அவர்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் இந்தியா எமது நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கு இலவச சுகாதார சேவையை வழங்குவதாக தெரிவித்தே இதனை ஆரம்பித்தது.

அப்படியாயின் எதற்காக மேல் மற்றும் தென் மாகாணத்தில் இதனை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரதேசங்களை விட மொனராகலை, பொலன்னறுவ போவை போன்ற பிரதேசங்களிலேயே சுகாதார சேவை குறைவாக இருக்கின்றது. அந்த பிரதேசங்களிலேயே இது இடம்பெற வேண்டும்.

அத்துடன் இந்த அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டுக்குள் இந்திய வைத்தியர்கள் உதவியாட்கள் மற்றும் சாரதிகள் வர ஆரம்பித்துள்ளனர்.

இந்த தொழில்களுக்கு எமது நாட்டில் இருந்து ஆட்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளலாம்.

ஏன் இந்தியாவில் இருந்து அழைத்துவர வேண்டும். அத்துடன் அண்மையில் சாரதிகள் தேவை என பத்திரிகையில் விளம்பரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அதில் 12 மணி நேர தொழில், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். மாதச்சம்பளம் 25 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் ஆங்கில அறிவுள்ள சாரதிகள் யாரும் 25 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு வரப்போவதில்லை.

அப்படியாயின் இந்த சம்பளத்துக்கு இந்தியாவில் இருந்து ஊழியர்களை அழைத்து வரும் நடவடிக்கையே இந்த திட்டமாகும். இதன் மூலம் எமது மக்களுக்கே தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போகின்றன.

எனவே அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்போகும் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னரே இவை ஆரம்பிக்கப்படுள்ளதென்றால் எதிர்காலத்தில் இன்னும் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

அத்துடன் அரசாங்கம் வற்வரியை அதிகரித்ததன் மூலம் மக்கள் மீது வாழ்க்கைச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. எட்கா மூலம் மக்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.