தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பு!

196 0

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தேயிலை மற்றும் இறப்பர் சம்பந்தமான சம்பள நிர்ணய சபை தீர்மானித்துள்ளது.

தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று (08) நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொழில்அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

சுமார் ஐந்து வருட காலதாமதப்படுத்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பிற்கான கோரிக்கை நிறைவேற்றப்படுமென ஜனாதிபதியின் ´சுபீட்சத்தின் தொலைநோக்கு´ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதேபோல்  மஹிந்த ராஜபக்ஷ கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஆயிரம் ரூபா சம்பளத்தை உறுதிப்படுத்தினார்.

நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்கத் தலைவர்களினால் 900 ரூபா அடிப்படைச் சம்பளமும், 100 ரூபா கொடுப்பனவுக்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த முன்மொழிவுக்கு முதலாளிமார் சம்மேளனம் உடன்படவில்லை. இதனைத் தொடர்ந்து குறித்த பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பில் 11ற்கு 8 என்ற வித்தியாசத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம் இறப்பர் மற்றும் தேயிலை தொழிற்றுறை சம்பந்தமான சம்பள நிர்ணய சபையில் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.