வாஷிங்டன்:கடந்த, 2008ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தஹாவுர் ராணாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை எதிர்த்து, அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008 நவம்பரில், பாகிஸ்தானைச் சேர்ந்த, லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.மும்பை தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில், 166 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் பயங்கரவாதியும், பாகிஸ்தானில் வசித்த அமெரிக்கருமான டேவிட் கோல்மேன் ஹெட்லியை, அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் அப்ரூவராக மாறியதை அடுத்து, அவருக்கு, 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, அமெரிக்க சிறையில், அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஹெட்லியின் நெருங்கிய நண்பரும், கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளி தொழிலதிபருமான தஹாவுர் ராணா, 59, என்பவரையும், அமெரிக்க போலீசார் கைது செய்தனர். பின், அவரை அமெரிக்க நீதிமன்றம் விடுவித்தது.
இதற்கிடையே, ராணாவை தேடப்படும் குற்றவாளியாக, இந்தியா அறிவித்தது. அவரை நாடு கடத்த உதவும்படி, அமெரிக்க அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.இதை ஏற்று, கடந்த ஆண்டு ஜூனில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ராணா மீண்டும் கைது செய்யப்பட்டார்.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘மும்பை தாக்குதல் வழக்கில், ராணாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்ற வாதத்தை ஏற்று, அமெரிக்க நீதிமன்றம் ஏற்கனவே அவரை விடுவித்துள்ளது. தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கையை ஏற்க முடியாது’ என, ராணா தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
நாடு கடத்தலை ஆதரிக்கும் அமெரிக்க அரசு, இது தொடர்பாக தங்கள் தரப்பு பதிலை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

