ஜெனீவா களம் இம்முறை சவாலானது!

136 0

ஈழத்தீவில் ஆறு தசாப்பதங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் சிங்கள ஏகாதிபத்திய அரசாங்கத்தால் காலத்துக்காலம் பல்வேறு வகையில் அழிக்கப்பட்டு வருகின்றார்கள்.

தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது ”உள்ளங்கை நெல்லிக்கனியே ” ஆனால் இந்த ஏகாதிபத்திய போட்டி உலகம் அதனை ஏற்கத்தயாரில்லை.

வல்லரசுகள் தமக்கு கேடயமாக ஐக்கிய நாடுகள் சபையை வைத்திருக்கின்றது. மனித உரிமை பேரவையில் தர்மம் தலைதூக்கும் கருத்துக்கள் வானைப் பிளக்கும்..ஆனால் மனித உரிமை மீறப்பட்டவர்கள் எந்த நிவாரணமும் இன்றி கரைந்து போவார்கள்.

தமிழ்மக்களின் ஆயுதப் போாட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியல் தீர்வு எதுவும் எட்டப்படாது .தமிழ் இனம் நாதியற்று உள்ளது.

இலங்கைத்தீவில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர் எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம் என்ற நிலையே காணப்படுகின்றது..தமிழ் மக்கள் மீண்டும் சீண்டப்படுகிறார்கள் அண்மைக்காலமாக தமிழ் இளைஞர்களை மீண்டும் ஆயுதம் ஏந்த வைக்க சிறிலங்கா அரசாங்கம் மறைமுகமாகத் தூண்டுகிறது.

கிழக்கில் தமிழ் பண்ணையாளர்களை கைது செய்ததுடன் பண்ணையாளர்களின் கால்நடைகள் கொல்லப்பட்டன. வடக்கில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 8ம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினரை பயன்படுத்தி உடைக்கப்பட்டது.

வன்னி முல்லைத்தீவில் இந்து கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையை அமைச்சரே பிரதிஷ்டை செய்துவிட்டு சென்றார்.

தீவகத்தில் மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணியை அபகரிக்கும் சிறிலங்கா கடற்படை. அதே வேளை தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக தமிழர் நிலங்கள் நாள்தோறும் சல்லடை போடப்படுகின்றது.

இதே வேளை ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவள்ளது. இதில் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்களுக்கு உலகத்தின் பல பாகங்களில் இருந்து கண்ட னக்குரல்கள் எழுப்படுகின்றன. அதே சமயம் , ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புகளின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்,சிறிலங்கா அரசாங்கத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும், சர்வதேச பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரம், ஜெனிவாவில் இருந்து நியூயோர்க்கிற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, இலங்கையில் இடம்பெற்ற மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்றும், இலங்கையைக் கண்காணிப்பதற்காக பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், கோரப்பட்டுள்ளது.

எனவே ஜெனீவா களம் இம் முறை அமர்களமாகவே உள்ளது. தமிழ் மக்கள் சர்வதேசத்தையே தமது மீட்பர்களாக நம்பி இருக்கின்றார்கள்.