முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக மாற்ற வேண்டும்- ஐக்கிய மக்கள் சக்தி

236 0

புதிய அரசியலமைப்புக்கு அனைத்து இன மக்களது மற்றும் கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக அமைக்கவேண்டும் என பிரதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அவ்வாறு செயற்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்புத் தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளும் அனைத்துக் கட்சிகளும் இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை கடிதம் ஒன்றின் மூலம் தெளிவாக அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அனைத்து இன மக்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவில்லாமல் தயாரிக்கப்படும் அரசியலமைப்பினூடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அரசியலமைப்பு தொடர்பாகவும் விமர்சனங்கள் வருவதற்கு, சிறுபான்மை மக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத் தவறியமையே காரணம் எனவும் அந்தத் தவறை மீண்டும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.