குர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் தோழமை.

465 0

துருக்கியில் உள்ள குர்திஸ்தான் அரசியல் கைதிகளுக்கான விடுதலையை வலியுறுத்தி கடந்த நாட்களாக பேர்லினில் தொடர்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

துருக்கியில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்துடன் ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்த பேர்லின் மாநகரின் மத்தியில் ஒரு வாரமாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்று வந்தது. அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தால் , தங்கள் நிலைமையை வெளிப்படுத்தவும் அத்தோடு தங்கள் விடுதலையை நோக்கியும் போராடுகிறார்கள். துருக்கியில் சிறை நிலைமை மிகவும் தாங்கமுடியாததாகவும் மற்றும் தொற்றுநோய் நிலைமை மிக மோசமாகின்றது. எதிர்கருத்துள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் கைது செய்யப்படுகிறார்கள், பல்லாயிரக்கணக்கானோர் காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலியை சுமந்து நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் சார்பாக திரு சங்கர் அவர்கள் இக் கவனயீர்ப்பு நிகழ்வில்
கலந்துகொண்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் குர்திஸ்தான் மக்களுக்காக தமிழ் சமூகத்தின் தோழமையை வெளிப்படுத்தியதோடு இப் போராட்டம் வெற்றிபெற
வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

“எல்லாவற்றிற்கும் மேலாக, இம்ராலி சிறைத் தீவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பி.கே.கே தலைவர் அப்துல்லா ஒச்ஷாலானின் தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும்,
தனிமைச் சிறைவாசம் சித்திரவதையைத் தவிர வேறொன்றுமில்லை எனவும் , அதனால் இது சர்வதேச அளவில் சட்டவிரோதமானது” எனவும் திரு சங்கர் அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.

“சுதந்திரத்திற்காக போராடுவதையும் , ஒரு மிருகத்தனமான அடக்குமுறையை எதிர்த்து போராடுவதையும் அதற்காக துன்புறுத்தப்படுவதையும் ஈழத்தமிழர்கள் நன்கு உணர்ந்தவர்கள்.

சிங்கள பேரினவாத அரசால் 2009 இல் ஈழத்தமிழர்கள் மீது நடைபெற்ற உச்ச இனப்படுகொலைக்கு பின்பும் , பல அரசியல் கைதிகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் என்று கூட எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களின் சுதந்திரத்திற்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுகிறோம்!

சமூக நீதி,மக்களின் சுதந்திரம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாம் அனைவரும் கூட்டாக இணைந்து உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்படும் இனங்களுடன் சேர்ந்து போராடுவது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தனது உரையை நிறைவுசெய்தார்.