தமிழக மக்கள் மோடியை விட ராகுலுக்கு ஆதரவாகவே உள்ளனர்- கேஎஸ் அழகிரி

212 0

தமிழக மக்கள் மோடியை விட ராகுலுக்கு ஆதரவாகவே உள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் உரையாற்றிய குருமூர்த்தி பா.ஜ.க.வுக்கு வரம்பு மீறி வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கிறார். பா.ஜ.க. இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வளரும் என்று ஆருடம் கூறியிருக்கிறார். சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டு தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்று ஆலோசனை கூறியிருக்கிறார்.

இதற்கு உடனே தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார் கடுமையாகக் குருமூர்த்தியை விமர்சனம் செய்திருக்கிறார். அதில், ‘தினகரனிடம் காசு வாங்கிக் கொண்டு பேசி வருகிறார். நாரதர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அவர் தன்னை ஒரு கிங் மேக்கர் என்று பில்டப் செய்து வருகிறார்’ என்று கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். இத்தாக்கு தலைத் தொடர்ந்து தமது டுவிட்டர் பக்கத்தில் குரு மூர்த்தி திடீர் பல்டி அடித்து அ.ம.மு.க.வை இன்னமும் மன்னார்குடி மாபியாவாகத் தான் கருதுகிறேன் என்று கூறி தமது ஆலோசனையைத் திரும்பப் பெற்றுக் கொண்டி ருக்கிறார்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். துக்ளக் ஆசிரியராக சோ இருந்த போது, ஒருகாலகட்டம் வரை பெருந்தலைவர் காமராஜரையும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும் ஆதரித்து எழுதியும், பேசியும் வந்திருக்கிறார்.

1996 தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்ற நடிகர் ரஜினிகாந்தை களம் இறக்கி, தி.மு.க., த.மா.கா. கூட்டணியை வெற்றி பெற வைப்பதில் பெரும் துணையாக இருந்தவர்.

தேர்தலில் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டுமா? மோடி வர வேண்டுமா? என்று கேள்வி எழுந்தபோது தமிழக மக்கள், மோடியை விட ராகுல் காந்திக்கு 60 லட்சம் மக்கள் அதிகமாக வாக்களித்திருந்தார்கள்.

எனவே, தமிழ் மக்கள் மோடி மீது இருக்கிற வெறுப்பை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தத் தான் போகிறார்கள். அதனால், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.