தமிழ் கல்விக் கழகத்தின் தைப்பொங்கல் நிகழ்வுகளும், வெளிச்சவீடு சஞ்சிகை வெளியீடும்.

2157 0

தமிழர் மரபுத் திங்களில் வெளியாகியது வெளிச்சவீடு.

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவைத் தத்தமது தமிழாலய மட்டத்தில் தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் சிறப்பாகக் கொண்டாடி வருவது நீண்டகாலப் பண்பாகும்.

அந்த வகையில் உலக மனித இனத்தை அழிப்பதற்கு உருவாகியுள்ள கோவிட்19 என்ற தொற்று நோயின் வேகமான பரவலினால், திட்டமிட்டபடி முற்றத்தில் பொங்கி, கதிரவனுக்கு நன்றி கூறும் நிகழ்வுகள் தமிழாலய மட்டத்தில் நிறுத்தப்பட்டு, நிர்வாகிகள் அல்லது ஆசிரியர்கள் தமது வீடுகளின் வசதிக்கேற்ப தமது குடும்பத்துடன் அந்நிகழ்வைக் கொண்டாடினார்கள்.

தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டு ரீதியான செயற்திறன்களைச் சிறப்பாகத் தொகுத்து, ஆவணப் பெட்டகமாக வெளிவரும் வெளிச்சவீடு என்ற நூல் 2020ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகளுக்கு வண்ணங்கள் வழங்கிச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அச்சிறப்பு நூலைத் தமிழரின் மரபுத் திங்களான இன்று, அந்நூற் குழுவின் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளரான திரு. ராமேஸ் ஜெயக்குமார் அவர்கள் முதற் படியை வெளியிட்டு வைத்தார். அச்சிறப்புமிக்க முதற்படியை லண்டவ் தமிழாலயத்தின் நிர்வாகி தமிழ் வாரிதி திரு. கந்தசாமி குலேந்திரராசா அவர்களும் அவரின் துணைவியார் ஆசிரியர் தமிழ் வாரிதி திருமதி சாந்தினி குலேந்திரராசா அவர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இவ்வெளியீட்டு நிகழ்வின் காணொளியை இங்கே சிறப்பாக இணைத்துள்ளோம்.

எதிர்வரும் வாரத்தில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 3000க்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கும் யேர்மனி மற்றும் வெளிநாடுகளின் அரசியற் பிரமுகர்கள், குமுகாய நலப் பணியாளர்கள், பல்கலைக் கழகங்கள், நூல் நிலையங்கள் போன்ற அனைவருக்கும் இலவசமாக அஞ்சல் வழியாக அனுப்பிவைக்கப்படும்.
பல்லாயிரம் பணியாளர்களின் எண்ணங்கள் வண்ணங்களாகியுள்ளதையும் 12மாதங்களின் கடும் உழைப்பை 208 பக்கங்களுக்குள் பெட்டகமாகப் பாதுகாத்ததையிட்டுப் பெருமைப்படும் இவ்வேளையில், தமிழ்க் கல்விக் கழகத்தின் அத்தனை பேருக்கும் பொங்கல், புத்தாண்டு வாழ்த்துகள் கூறி மகிழ்ச்சியடைவதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் பெருமிதமடைந்தார்.