இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பினைக் கொண்ட உலகவாழ் தமிழ் மக்களுக்கு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்- ஊவா ஆளுநர்

232 0

இயற்கைக்கு தமது நன்றியைப் பறைசாற்றும் வகையில் அனுஷ்டிக்கப்படும் தைத்திருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகவாழ் தமிழ் மக்களுக்கு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மானுட வளர்ச்சியின் ஆரம்பம் முதலே இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பினைக் கொண்டிருந்த மனிதன், ஒட்டுமொத்த இயற்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சூரிய பகவான் மீது கொண்ட அபரிமித பக்தியை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த வழிபாடாகவே தைப்பொங்கல் இருந்து வருகின்றது.

மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான உணர்வுபூர்வமான உறவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வான இத்திருநாள் அம்மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நற் சிந்தனைகளை ஒன்று சேர்க்கும் நாளாகவும் அமைகின்றது.

அத்தோடு, உழவுக்குப் பெருமை சேர்க்கும் தைத்திருநாளானது, உணவு உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவைப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கும் வலு சேர்ப்பதாகவே அமைகிறது.

ஜனாதிபதி தலைமையினாலான சுபீட்சத்தை நோக்கிய பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்பாராத விதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நோய்த்தொற்றினை வெற்றிகொள்ள முழு உலகுடனும் இணைந்து நாமும் போராடி வருகின்றோம்.

எத்தகைய தடைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றை வெற்றிகொள்வதற்கான ஆத்ம பலமும் தைரியமும் எம்மிடம் உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள், அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.