தனித்து நிக்கின்றோமா?? இளந்தீரன்.

163 0

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவம் எல்லோர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு இல்லாமல் அதற்க்கான எதிர்வினையையும் செய்ததோடு செய்தும் கொண்டிருக்கிறார்கள்.

இன்று சிலையை உடைப்பவர்கள் நாளை உங்களையும் அழிப்பார்கள் என்ற கோசம் மீண்டும் எமது மண்னில் கேட்கிறது. இது தனியே ஒரு சம்பவத்துக்கு எதிரான எதிர்வினையல்ல, இது எமது போராட்டத்தின் தொடர்ச்சி. ஆனாலும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அசம்பாவிதங்களின் காலவரிசையில் இதுவும் திகதி பதியப்பட்டு ஒரு சம்பவமாக போய்விடாமல் இருக்கவேண்டும். அப்படியானால் இதன் புள்ளியில் எமக்கான அரசியல் எது என்பதை ஆழமாக பற்றிப்பிடிக்கவேண்டும்.

இந்த நேரத்தில் இந்த இடத்தில் நாம் எவ்வாறு இச்சம்பவத்தை பார்க்க வேண்டும். இந்த நினைவுத்தூபி அழிப்பிற்க்கும் நாம் வாழும் உலகமயமாக்கல் நடைமுறைக்கும் என்னதொடர்பு இருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது.

இன்று நாம் எவ்வகையான ஒரு சிந்தாந்தத்தின் கீழ் வாழ்கின்றோம் என்று கேட்டால் „நவதாராளவாதம்’ என்று பதில்சொல்லிவிட்டு இது ஏதோ தாராளகுணம் கொண்டதுபோல் இதன் அம்சங்கள் புரியாமலே கடந்துபோகின்றோம். அதற்கு மேலாக தனிமனிதர்களாக நாம் எல்லோரும் இந்த சித்தாந்தத்துக்கு உட்பட்டுதான் உள்ளோம் என்பதை ஏற்காமலும் புரியாமலும் அதனோடு ஒத்துப்போகின்றோம்.

நவதாராளவாதம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுபோல் பல பெருளாதார கொள்கைகளை தனக்குள் வைத்துள்ளது. முக்கியமாக பணம் உள்ளவர்களை இன்னும் பணம் உள்ளவர்களாகவும், ஏழைகளை இன்னும் ஏழைகளாகவும் உருவாக்குகின்றது. உங்களுக்கு எதுதேவை என்பதையும் உற்பத்திசெய்பவர்களே முடிவெடுப்பார்கள். அவர்களின் இலாபத்துக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்வதற்கும் அதை மக்களிடம் சென்றடைய செய்வற்கும் அந்தந்த வேலைகளுக்கு படித்தவர்கள் தேவைப்படுகின்றார்கள். கல்வி நிலையங்கள் உற்பத்தியாளர்களின் இலாபத்தை பெருக்குவதற்கு தேவையான ஆட்களை உருவாக்குகின்றன.

இவ்வாறான இடத்தில் இந்த உருவாக்கம் குழம்பாமல் இருக்க அரசு அதற்கேற்ற நபர்களை அந்த இனம்சார்ந்து அல்லது அந்த சமூகம்சார்ந்து நியமிக்கின்றது. உற்று நோக்கினால் இந்த யாழ் பல்கலைக்கழக விடயத்தில் இதை நாம் பார்க்கலாம்.

நவதாராளமயமாக்கல் குறிப்பாக சுற்றுச்சூழலையோ, இயற்கை சமநிலை குழம்பலையோ என்றும் கருத்தில்கொள்ளாது. இதற்காக இதே மனநிலையை கொண்ட சமூகத்தை உருவாகவேண்டிய தேவை அதற்கு இருக்கிறன்றது. சமூகத்தில் படித்தவர்கள் கல்லியாளர்கள் என்று செல்லப்படுபவர்கள் உருவாகும் போது அவர்கள் எந்த புரட்சி சிந்தனையும் இல்லாமல் உருவாகவேண்டும். ஆனால் எமது சமூகம் சமூகப்புரட்ச்சி மட்டுமல்ல மானிட சமூகத்துக்கு தேவையான அனைத்து விடயங்களுக்குமான புரட்சிகளையும் அதன் நடைமுறை வாழ்வியலையும் காட்டியுள்ளது.

இதனால் உலக ஒழுங்கு அவர்களை ஏற்கவில்லை, அதன் நினைவுகள் அதன் தொடர்ச்சிகள் எப்போதும் இளைஞர்கள் மனதில் கேள்விகளை ஏற்படுத்தும். அதனால் ஈழத்தமிழர்களின் புரட்சியின் எந்த நினைவையும் குறிப்பாக கல்விநிலையங்கள் அனுமதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும். இது சிங்கள அரசுக்கு மட்டுமல்ல இந்த உலக ஒழுங்குக்கும் பிடிக்காது. இது ஒரு நினைவுத்தூபி மட்டுமல்ல இரத்தமும் சதையுமாக எம் உறவுகள் உயிர் கொண்டு எமுதிய போராட்ட நினைவுச்சின்னம். இந்தச்சின்னம் மீண்டும் மீண்டும் கூக்கிரலிட்டுச் சொல்லும். எமக்கான வாழ்வியல் எதுஎன்று. இந்த நினைவுத்தூபி தரும் நினைவுகளுடன் கல்விகற்க்கும் சமூகம் என்னசெய்யும்? இது தனக்கான தேசம், என் மொழி, எனக்கான கலாச்சாரம், எனக்கான பண்பாடு என்ற புரிதலுடன் இந்த உலக ஒழுங்கில் இணைவார்கள் . இது சிங்கள அரசுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.

இதுதான் யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழ்கின்றது. எந்விதமான இன உணர்வையும் பிரதிபலிக்காமல் சிங்கள பௌத்த அரசு சொல்லும் புனைகதை வரலாற்றை மட்டும் உள்வாங்கி புதிய கல்வியாளர் தலைமுறை உருவாக வேண்டும் என்பதே அரசின் தேவை.

தூரப்பார்வை, தெளிந்த சிந்தனை உடைய தலைமையை ஈழத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்த புறச்சூழல் அனுமதிக்காது. எனவே ஈழத்தமிழர்கள் அனைவரும் எமக்கான அரசியல் எது என்பதை மிகத்தெளிவாக உள்வாங்கி உலக பூகோள அரசியலை விளங்கி, எமக்கான தீர்வு கிடைக்க இந்த உலக ஒழுங்கு மாறவேண்டும் என்ற புரிதலை அடைய வேண்டும். இந்த புரிதலை அடையும்போது எமக்கு தெரியும் நாம் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல எமக்கான சக புரட்ச்சியாளர்கள் உலகெங்கும் உள்ளார்கள். அவர்களுடன் நாம் கூட்டுறவுடன் போராட வேண்டும். அப்போதுதான் நாம் தாயகத்தில் நிகழும் அடையாள அழிப்பினூடாக நிகழும் இனவழிப்பை நாம் சேர்ந்துநின்று தடுத்து வெல்லமுடியும்.

இளந்தீரன்.