ஜெயலலிதா வரி பாக்கி விவரம் கேட்டு தீபக் வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

210 0

ஜெயலலிதாவின் வரி பாக்கி விவரங்களைக் கேட்டு தீபக் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் தீபக் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.9 கோடியை சென்னை மாவட்ட முதன்மை கோர்ட்டில் டெபாசிட் செய்துள்ளது. இந்த தொகையில் இருந்து, ஜெயலலிதாவுக்கு உள்ள வருமான வரி பாக்கி தொகையை வசூலிக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், ஜெயலலிதாவுக்கு வருமான வரி, சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி பாக்கித் தொகை எவ்வளவு உள்ளன? இதுகுறித்து அனைத்து விவரங்களையும் கேட்டு வருமான வரித்துறைக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை பதில் எதுவும் இல்லை. எனவே, இந்த விவரங்கள் அனைத்தையும் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தீபக் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.எல்.சுதர்சனம், கடந்தாண்டு ஜூலை மாதம் கொடுக்கப்பட்ட இந்த கோரிக்கை மனுவுக்கு வருமான வரித்துறை இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை” என்று வாதிட்டார்.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘வருமான வரி, சொத்து வரி போன்ற விவரங்கள் வேண்டுமானால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை அணுக வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக எல்லா விவரங்களையும் கேட்டு இதுபோல வழக்கு தொடர முடியாது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதில், குறைந்தபட்சம் மனுதாரர் யாரை அணுக வேண்டும்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.