பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வாழ்த்துச் செய்தி!

290 0

புத்தாண்டை வரவேற்போம்….!
புதிதாகப் பிறக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டை புத்துணர்வோடும், நம்பிக்கையோடும் வரவேற்றுக் கொள்வோம். பிறக்கும் புத்தாண்டில் அனைத்து உறவுகளும் அமைதியையும், நிம்மதியையும், ஆரோக்கியமான வாழ்வையும், வளங்களையும் பெற்று வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.

கடந்து சென்ற 2020 ஆம் ஆண்டு மனிதகுலத்தின் இயல்பு வாழ்வைக் குழப்பி, உலக ஓட்டத்தின் ஒழுங்கையே நிலைகுலையச் செய்யும்  வகையில் கொவிட்19 நுண்கிருமித் தொற்று தன் வீரியத்தை வெளிக்காட்டி நின்றது. இது தமிழர் வாழ்வையும், இயல்பான இயக்கத்தையும் பாதித்து முடக்க நிலைக்குக் கொண்டு சென்றது. ஆனால்,  சிறிலங்கா அரசு இச்சந்தர்ப்பத்தை மறைமுகமான தமிழினவழிப்பை நடாத்துவதற்கான ஆயுதமாகப் பாவித்துக் கொண்டு தன்னிருப்பை வலுப்படுத்திக் கொண்டது.
சிறிலங்காவில்,  தனிச் சிங்கள மக்களின் ஆதரவுடன் தெரிவாகியுள்ள அரசாங்கம் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழரைத் திட்டமிட்டு நசுக்கி அவர்களின் அடிப்படை உரிமைகளையும் மறுத்து வருகின்றது. பெரும்பான்மைச் சிங்களவரைப் பாதுகாப்பதாக நாடகமாடி ஆட்சியாளர்கள், ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி நீடிக்கும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை அவசரம் அவசரமாக நிறைவேற்றி உள்ளார்கள். தொடர்ந்து புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முனைப்பில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இதிலும் சிறுபான்மைத் தேசியங்களுக்கான உரிமை, பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? என்ற கேள்வி அனைவரிடமும் மேலோங்கியுள்ளது . இவைகளின் தாக்கம், விளைவுகள் பற்றி தமிழ், முஸ்லீம் அரசியல் தலைமைகள் அக்கறையின்றி தங்களுக்குள் பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொள்கின்றனர். மக்கள் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய நடாத்தும் போராட்டங்கள் நீதித்துறை ஊடாகவும், பாதுகாப்புப் படையினரால் பயமுறுத்தப்பட்டும் அடக்கப்படுகின்றன. தமிழர்களின் போராட்ட உணர்வு, சிந்தனை, அடையாளங்கள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் பயங்கரவாதம் என்னும் போர்வையில் மறுக்கப்பட்டு மறக்கச் செய்யும் உத்தி கையாளப்படுகிறது.
இன்று எமது மக்களின் அவலத்தை சர்வதேசப் பரப்பில் கொண்டு செல்லவும், எமது அபிலாசைகளை வெளிப்படுத்தவும் புலம்பெயர்வாழ் தமிழரே உள்ளனர். இது சிறிலங்கா அரசிற்கு சவாலாக உள்ளது. நடைமுறையில் தோற்கடிக்கப்பட்ட ஆயுதப்போர், கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். இதுதான் இன்று தொடரும் போர். சர்வதேசத்தால் தொடரப்படும் ”விடுதலைப் புலிகளுக்கான தடை” இதன் ஓர் அங்கமே. இது அரசியல் ரீதியில் எதிர்கொள்ள வேண்டியவையே. இவற்றிற்கான தீர்வாக, புலம்பெயர்வாழ் அமைப்புகள் ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முனைப்புப் பெறவைக்க வேண்டும்.  இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டுக்கொண்டிருகின்றன. அது வெற்றிபெறுவதற்கான ஆதரவை அனைத்துத் தரபினரும் வினைத்திறனுடன் வழங்குவோம். சர்வதேசத்திடம் கோரிக்கைகளை முன்வைக்கும்போது சர்வதேசத்திற்கு வேண்டிய தேவை எம்மிடம் இருப்பதை உறுதிசெய்ய எம்மக்களை அரசியல்மயப்படுத்தி எம்மிடம் உள்ள ஒன்றுபட்ட பலத்தைக் கட்டி எழுப்புவோம்.
கடந்த ஆண்டு பீடை ஆண்டாகவே கடந்து சென்று விட்டது. இவ்வாண்டை நம்பிக்கையுடனும், மனவுறுதியுடனும் எதிர்கொண்டு எமது இலட்சியத்தை சென்றடைய கை கோர்த்து பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.