தமிழக மீனவர்கள் நலன் கருதி கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் – வைகோ அறிவிப்பு

505 0

vaikoதமிழக மீனவர்கள் நலன் கருதி இந்திய மத்திய அரசு உடனடியாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எதிர்வரும் 16ஆம் திகதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர் கடலில் நீந்தி விளையாடி, படகுகளைச் செலுத்தி மீன்கள் செல்வத்தை வலைகளில் அள்ளியும், கடலின் ஆழ்மடியில் சிப்பிகளில் உறங்கும் முத்துக்களை எடுத்தும் தமிழகத்துக்கு வளத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கிய பரதவர்களாகிய மீனவ மக்களின் வாழ்வு 40 ஆண்டு காலமாக இலங்கை அரசின் கொடுமையால் சிதைந்து சின்னாபின்னமாகிறது.

தமிழகத்தின் உரிமை பூமியான கச்சத் தீவினை 1974இல் இந்திய அரசு சட்ட விரோதமாக இலங்கை அரசுக்கு தாரைவார்த்துக் கொடுத்து, தமிழக மீனவர்களின் வாழ்வை பலி பீடத்தில் நிறுத்தியது.

ஒரு நாட்டின் குடிமகன், மற்றொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உயிரைப் பறிகொடுத்த நாடு வெகுண்டு வெளியுறவைத் துண்டிக்கும்.

ஆனால், ஆயிரக்கணக்கான முறை இலங்கை கடற்படை தமிழர் கடலில் நுழைந்து, நமது கடல் பகுதியிலும், சர்வதேச கடல் பகுதியிலும் தமிழக மீனவர்களை தாக்குவதும், சுட்டுப் படுகொலை செய்வதும், படகுகளை உடைப்பதும், வலைகளைக் கிழித்து எறிவதும், மீன்கள் செல்வத்தைக் கொள்ளையடிப்பதும், பல நேரங்களில் தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து அம்மணமாக்கி அடித்துக் கடலில் வீசுவதும், மேலும் பல வேளைகளில் நமது மீனவர்களைக் கொண்டுபோய் இலங்கைச் சிறைகளில் வதைப்பதும், தமிழர்களின் படகுகளை அங்கே சிறை வைப்பதும் பெரும்பாலும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

தமிழக மீனவர்களை தன்னாட்டுப் பிரஜைகளாக இந்திய அரசு கருதுகிறதா? என்று கேட்டால், இல்லை என்ற பதில்தான் எழுகிறது.

இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி மடிந்தனர். இத்தனைக்குப் பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது வாடிக்கையாகிப்போன நிலையில், இலங்கை அரசோடு இந்திய அரசு கூடிக் குலாவுகிறது.

தமிழர்களின் வரிப்பணமும் சேர்ந்துதான் இந்தியக் கடற்படையினர் மாத ஊதியம் பெறுகின்றார்கள் என்ற உணர்வுகூட இல்லாமல், இந்தியக் கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படையினரோடு கும்மாளமிடுகிறார்களே தவிர, தமிழக மீனவர்களைக் காக்க எந்தக் காலத்திலும் எள்ளளவும் செயல்பட்டது இல்லை.

இந்தப் பின்னணியில், இன்னும் ஒரு பெரும் கொடூரமான அபாயம் தமிழக மீனவர்களின் தலைக்குமேல் பேரிடியாக விழக் காத்திருக்கிறது. ஆழிப் பேரலை உயிர்களை வாரிச் சுருட்டியதைப் போல தமிழக மீனவர்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக நரகப் படுகுழியில் தள்ள சிங்கள அரசு திட்டம் போட்டுவிட்டது.

1979 சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றுவதோடு, ஒரு படகுக்கு 7 இலட்சம் முதல் 7 கோடி வரை அபராதம் விதிக்கும் அக்கிரமமான சட்டத்தை 2017 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் அரங்கேற்ற ஆயத்தமாகிவிட்டது.

தமிழர்களின் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டிய முழுப் பொறுப்பும், கடமையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழக மீனவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், இலங்கை அரசின் அராஜகமான சட்டத்தை நிறைவேறவிடாமல் தடுக்கவும் மத்திய அரசு உடனடியாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில், இராமேஸ்வரத்தில் டிசம்பர் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கழகக் கண்மணிகளும், மீனவச் சகோதர சகோதரிகளும் அலைகடல் ஓரத்தில் வெள்ளமாய்த் திரள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.