இந்த நாளிலாவது தமிழகம் சிந்திக்குமா?

335 0

1987.12.24…. இந்த நாள் தமிழீழத்தின் மூலைமுடுக்கெல்லாம் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு மக்கள் திலகத்தின் திருவுருவப் படத்தைவைத்து தாயக மக்கள் தன்னியல்பாகத் தமது இதயஅஞ்சலியைத் செலுத்திய காட்சி அக்காலப் பகுதியிலே தாயகத்திலே வாழ்ந்த உறவுகள் மறந்திருக்க வாய்ப்பில்லை. தாய் தமிழகம் மட்டுமன்றித் சேய்த் தமிழீழமும் கொண்டாடும் ஒரு அற்புதமான மனிதநேயப் பண்புடைத் தலைவனைத் தமிழினம் இழந்தநாளான இந்நாள் மறந்துவிட்டுக் கடந்துவிடமுடியாத ஒரு துயரநாளாகும்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை மானசீகமாக நேசித்ததோடு சரியான தலைமையை இனங்கண்டு உறவாடி உயர்வுக்குக் கொடையளித்த பெரும் வள்ளலாகத் திகழும் எம்.ஜி.ஆர் அவர்களின் இழப்பு யாராலும் இட்டு நிரப்பிடமுடியாத இழப்பாகும். அயலகத்திலிருந்து தமிழினத்தின் அழிவுகண்டு நடித்தவர்கள் நாடகமாடியோரின் மத்தியிலிருந்து மிகுந்த அக்கறையோடும் பரிவோடும் தமிழரின் விடுதலையை ஆத்மாத்தமாக நேசித்த மாந்தநேயம் மிக்கவராக மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் அவர்கள் திகழ்ந்தார். போராட்டத்தை முன்னகர்த்த நிதிதேவையென்று தெரிவித்தபோது எந்தவித தயக்கமுமின்றி கொடுத்துதவிய கருணையுள்ளம் கொண்டவரான எம்.ஜீ.ஆர் அவர்களைத் தமிழீழ மக்கள் என்றும் மறக்காது மனங்களில் வைத்துள்ளார்கள் என்பது மெய்நிலையாகும்.

அன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் தனது பதவிக்கும் பொறுப்புக்கும் அரசியலுக்கும் அப்பால் மாந்தநேயத்தை காட்டிய ஒரு மாபெரும் மனிதனாக தமிழீழ மக்களோடு என்றும் வாழ்வார். எம்.ஜீ.ஆர் அவர்களின் மறைவென்பது தமிழக மக்களுக்கு மட்டுமன்றித் தமிழீழ மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது மறைவின்பின் இன்றுவரை தாய்த் தமிழகத்திலிருந்து ஒரு தார்மீக ஆதரவை வழங்கித் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தின் ஊன்றுகோலாக நிற்க்கக்கூடிய உறுதிமிக்க தலைமையைக் காணமுடியாதுள்ளமை என்பது தமிழகத்திற்கு அருகிலேயா தொடர் அழிவுகளைச் சந்தித்தவாறு தமிழீழ மக்கள் இருக்கிறார்கள் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. தமிழீழ மக்களின் இந்தச் சிந்தனையை மாற்றியமைத்து அவர்களுக்கு ஒரு தார்மீக ஆதரவுக் குரலெழுப்பும் சக்தியாக அவரால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாதிருப்பது பெரும் ஏமாற்றமே. செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது அவரால் தமிழகச் சட்டசபையிலே இலங்கைத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்று முன்மொழிந்து அதனை நடுவனரசிடம் கையளித்ததோடுஇ பிரதமரிடம் (நரேந்திரமோடி) நேரடியாக எடுத்துரைத்தார். இந்த விடயம் குறித்துப் பேசவோ அல்லது தமது சபைகளில் உரையாடி முன்கொண்டு செல்லவோ திராணியற்ற ஒரு நிலையில் தமிழகம் இருப்பதும் மிகப்பெரும் கவலைக்குரியதே.

பரப்பளவில் பத்தாவது மாநிலமாக இருந்தபோதும் 70மில்லியன் தமிழ்பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாகவும் இந்தியாவின் பொருண்மியத் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ள அரசைக்கொண்ட தமிழகம் தனது பலத்தைப் புரிந்துகொண்டு மக்கள் திலகமாகி இன்றுவரை புகழ்கொடிவீசும் எம்.ஜீ.ஆரால் உருவாக்கப்பட்டுத் தீர்க்கமான துணிவுமிகு முன்மொழிவை நிறைவேற்றிய செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் பின்னாளில் வழிநடாத்தப்;பட்ட கட்சியென்ற வகையிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது தற்போதும் தமிழர்தாயகத்திலே திட்டமிட்ட அடிப்படையில் நடாத்தப்பட்டுவரும் இன அழிப்பையும் நிலப்பறிப்பையும் கருத்திலெடுக்காது மௌனம் காப்பதுகூட ஒருவகையில் மறைமுகமாக ஏற்றுக்கொள்வதுபோன்றதே. இந்தச் செயற்பாடானாது தமிழகத்தை ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசானது கட்சியை உருவாக்கிய மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் அவர்களின் கொள்கைகளை மறுதலிக்கும் செயற்பாடகவே கொள்ளமுடியும்.

மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் அவர்களினால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்றவாறு அவரது கொள்கையைப் புறந்தள்ளி நடப்போர் கடந்து செல்லும் அவரது 33ஆவது நினைவுநாளிலாவது அழிக்கப்பட்டுவரும் தமிழீழ மக்கள் குறித்துச் சிந்திக்க வேண்டுமென ஈழத்தமிழினமும் உலகத் தமிழினமும் மட்டுமன்றித் தொப்புள்கொடி உறவான தாய்த் தமிழக உறவுகளும் எதிர்பார்ப்பது நியாயமானதே.
நன்றி.

மா.பாஸ்கரன்
யேர்மனி