’காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை’

229 0
வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள உருவாக்குவதற்கு, இன்னும் 10 வருடங்கள் தேவைப்படுவதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.

நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன், பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம், வவுனியா – இறம்பைவெட்டி கிராமத்தில், ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆங்கு தொடர்ந்துரைத்த அவர், மரநடுகை நிகழ்வுகள் போலியான வகையில் இடம்பெறக்கூடாதென்றார்.

வவுனியாவை பொறுத்தவரை பத்து வருடங்களுக்கு இப்படியான திட்டத்ங்களை நடைமுறைப்படுத்தினாலேயே, காணாமல் போன மரங்களுக்கு ஈடுசெய்ய முடியுமெனவும், அவர் கூறினார்.

வில்பத்து பகுதியில், காடழிப்பு இடம்பெற்றிருந்து. கேட்டால் குடியேற்றம் என்கிறார்கள் எனத் தெரிவித்த திலீபன் எம்.பி, உரிய அதிகாரிகளிடம் கேட்டிருந்தால், அவர்களே குடியேற்றத்துக்கு உகந்த இடத்தை ஒதுக்கிகொடுத்திருப்பார்களெனவும் கூறினார்.

அத்துடன், நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன், வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும், எனவும், அவர் தெரிவித்தார்.