மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் ஊடாக போதைப்பொருள் கடத்தலா?

205 0

மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணிக்கு கொழும்பிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரும் நடவடிக்கையே காரணம் என்று நம்பப்படுகிறது.

எனவே, இவ்விடயம் தொடர்பாக முறையான விசாரணையை பொலிஸார் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர், தற்போது சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்கள் வீடு திரும்பியதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி, முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலுள்ள சாரதிகளிடம் கடந்த 9ஆம் திகதி (புதன்கிழமை) மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த 11ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) கண்டறியப்பட்டது.

அவர் தம்புள்ளை சந்தைக்கும் சென்று வருபவர் என்று தெரிவிக்கப்பட்டதால், சுகாதார அதிகாரிகள் முதலில் அதனால் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ந்தனர்.

எனினும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் கொழும்பிலிருந்து வருகை தரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மருதனார்மடத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு பயணிப்பதாகத் தெரிய வந்தது.

அதனை உறுதி செய்யும் வகையில் தெல்லிப்பழை கட்டுவனில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்ட 36 வயதுடைய குடும்பப் பெண், 21 கிராம் ஹெரோயினுடன் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் தனது வாக்குமூலத்தில் கொழும்பு ஆமர் வீதியில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயினை பேருந்தில் எடுத்து வருவதாகவும் அவர் மருதனார்மடம் சந்தியில் இறங்கி கட்டுவனில் உள்ள தனது வீட்டுக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மருதனார்மடத்தில் இறங்கும் அவர் முச்சக்கர வண்டியிலேயே கட்டுவனுக்குப் பயணித்துள்ளார் என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் பொலிஸார் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று கொத்தணியுடன் தொடர்புடைய சிலர், கொவிட்-19 நோய்க்கான சிகிச்சைக்காக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி சிகிச்சை நிலையத்தில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனால் அவர்கள் வீடு திரும்பியதும் முறையான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்