பொத்துவில் பிரதேசத்தின் ஒரு பகுதி முடங்கியது

226 0

அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொத்துவில், அறுகம்பே பிரதேசத்ததை உள்ளடக்கிய பி-5 கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டு, அப்பிரதேசங்களில் எழுமாறா முறையில் பிசிஆர்  மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பிரதேசங்களில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கையை, பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொலிஸ், இரானுவத்தினர் ஆகியோர் இணைந்து துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கொரோனா வைரஸ்  தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஐ கடந்துள்ளதுடன், 97 குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

அறுகம்பை கடற்கரை பிரதேசத்தில் நேற்று (16) 110 மீனவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அறுகம்பை சுற்றுலாப் பிரதேசம், சின்ன உல்லை, சர்வோதய புரம், ஆத்திமுனை உள்ளிட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரதேசங்களில் பொலிஸார், இரானுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் இப்பிரதேசங்களில் கடைகள், சற்றுலா விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டு, சன நடமாற்றமின்றி, வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்துவில், சவாலைப் பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணிக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பிரசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவருடன் தொடர்புடைய 32 குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

வைரஸ் தொற்றுக்கள்ளான அனைவரும் பாலமுனை மற்றும் மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் .