போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்- வழக்கில் சிக்கிய மாணவிக்கு 2-வது சம்மன்

229 0

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவியும், அவரது தந்தையும் விசாரணைக்கு ஆஜராகாததால், போலீசார் 2-வது முறையாக சம்மன் அனுப்பினார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பல் டாக்டரான பாலச்சந்திரன், கடந்த 7-ந் தேதி தனது மகள் தீக்‌ஷாவுடன் சென்னையில் நடந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டது. அந்த மாணவி நீட் தேர்வில் பெற்ற உண்மையான மதிப்பெண் 27-க்கு மாறாக, மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் இடம்பெற்றிருந்தது.

ஒரு கம்ப்யூட்டர் மையம் மூலமாக, 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மாணவி தீக்‌ஷாவின் போலி சான்றிதழ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, அந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது சென்னை பெரியமேடு போலீசில் மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாணவி, அவரது தந்தை இருவரையும் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பெரியமேடு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்கள் இருவரும் நேற்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனால், வருகிற வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பெரியமேடு போலீசார் நேற்று 2-வது முறையாக அவர்களுக்குசம்மன் அனுப்பினர்.