முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

218 0

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது உடல் மிகவும் சோர்வடைந்திருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என டாக்டர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜெயில் அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் என கூறினர். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. நேற்றும் முருகன் 23-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென முருகன் மிகவும் சோர்வடைந்தார். இதனால் அவரை பலத்த போலீஸ் காவலுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு ஈ.சி.ஜி., ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்ற பரிசோதனை செய்தனர். சுமார் 1½ மணி நேர பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் அவர் வேலூர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் உடல் சோர்வாக இருந்ததால் மீண்டும் முருகன் இரவு 11 மணி அளவில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முருகன் உடல் மெலிந்து மிகவும் சோர்வடைந்த நிலையில் மெதுவாக நடந்து சென்றார். அவர் எப்போதும் காவி உடையில் சாமியார் போல் காணப்படுவார். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் கைதிகளுக்கான வெள்ளை நிற உடையை அணிந்திருந்தார்.

முருகனின் காவி உடையை வேண்டும் என்றே ஜெயில் அதிகாரிகள் பறித்து விட்டதாக அவரது வக்கீல் புகழேந்தி குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.