தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவுகளுடன்.

245 0

தமிழீழ மக்களின் சுயநிர்ணய போராட்டத்தின் உயிர் மூச்சாக விளங்குகின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வலுமிக்க அரசியல் சக்தியாக விளங்கியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். 1980களின் தொடக்கத்தில்   தமிழீழவிடுதலைப்புலிகளும் அதன் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுமே தனித்துவமான அர்ப்பணிப்பு மிக்க சக்தி என ஆரம்பகாலங்களிலேயே கண்டுணரந்த அரசியல் ஞானி பாலா அண்ணை அவர்கள். முப்பத்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக படிப்படியாக வளர்ச்சி பெற்று, வலுவடைந்த விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் படிநிலையில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு பெரும்பங்குண்டு.

இலகுவில் கல்வியாளர்களினாலேயே புரிந்து கொள்ள முடியாத பெரும் தத்துவங்களையெல்லாம் படிக்கும் எவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமையாக எழுதக்கூடிய வல்லமை இவருக்கே உரிய தனித்துவம். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார். ஆனால் தமிழீழ போராட்ட வரலாற்றை மிக நேர்த்தியாகவும், உண்மையான வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியதாகவும் “போரும் சமாதானமும்” (War and Peace) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் உலகத்தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக என்றென்றும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

உலக அரசியல் அறிவினை கல்வியோடு மட்டுமல்லாது தூரநோக்கில் உள்ளுணரும் ஞானத்தினையும் பெற்ற எமது தத்துவஞானி தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை இன்று நினைவு கூர்ந்து, அவரது ஆளுமைத்திறன் கற்றறிந்து எமது விடுதலையினை விரைவில் வென்றெடுப்போமென உறுதி எடுத்துக்கொள்வோம்.

“விடுதலை வீச்சாகி தமிழரின் பேச்சாகி தலைவனின் மூச்சாகி அரசியல் ஊற்றாகி நிறைவில் தேசத்தின் குரலானாய்.”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.