ஜெயலலிதா சமாதியில் அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள் அஞ்சலி செலுத்தினர். இப்படிப்பட்ட தலைவி எங்கள் நாட்டில் பிறக்கவில்லையே என்று அவர்கள் ஏக்கம் அடைந்தனர்.
சென்னை மெரினா கடற்கரைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 12 பேர் நேற்று வந்திருந்தனர். அவர்கள் கூறியதாவது:-
இந்தியாவின் கலாசாரத்தை பற்றி அறிந்து, சுற்றுலாப் பயணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தோம். அப்போது தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தியை எங்களுடைய சுற்றுலா வழிகாட்டி தெரிவித்தார். உடனே நாங்கள் அவருடைய இறுதி அஞ்சலியை பார்வையிட வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தோம். அவரும் எங்களை ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்துக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததால், போலீசார் எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
ஒரு தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இவ்வளவு மக்கள் திரண்டு வந்தது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. எனவே மெரினா கடற்கரையில் உள்ள அவருடைய (ஜெயலலிதா) சமாதியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதன்படி, இன்று(நேற்று) அவருடைய சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறோம்.
எங்கள் நாட்டில் தலைவர்கள் மரணம் அடைந்தால் அஞ்சலி செலுத்துவதற்கு கூட்டம் குறைவாகவே இருக்கும். ஆனால் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது, அவர் மக்கள் மனதில் எப்படி? வாழ்ந்திருப்பார் என்பதை நன்றாகவே உணர முடிகிறது. தற்போது ‘அவரை போன்ற தலைவி எங்கள் நாட்டில் பிறக்கவில்லையே’ என்று ஏக்கம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான “நியூயார்க் டைம்ஸ்”, தென்னிந்தியாவின் சக்தி மிகுந்த தலைவர் மறைந்துவிட்டார்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது’ குறிப்பிடத்தக்கது.

