முன்னாள் இராஜாங்க அமைச்சர் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு

297 0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அதிக உடல்கள் தகனம் செய்யப்பட்ட பொரளை மயான நுழைவாயிலில் நேற்று வெள்ளைத் துணிகளைக்கட்டி தனது எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார்.

இதன்பின்னர் தன்னுடைய முகப்புத்தக பக்கத்தில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஷாஹிர் மௌலானா, “கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக அமைதியான முறையில் பலமான எனது எதிர்ப்பை வெளியிடுகின்றேன்.

பிறந்து வெறும் 20 நாள்களேயான பாலகன் ஷாயிக் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 100 பேரின் உடல்கள் இங்குதான் வலுக்கட்டாய மாக தகனம் செய்யப்பட்டன. எனவேதான் நான் எனது முழு எதிர்ப்பையும் இந்த பொரளை மயானக் கதவிலே வெள்ளைத் துணியைக் கட்டி, வெளியிடுகின்றேன்.

எத்தனை முறை கோரிக்கைகள் முன்வைத்தாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே இது ஒரு தேசத்தின் கனத்த அவமான சின்னமாக இந்த மயான கதவினில் இந்த வெள்ளைத்துணிகள் தொங்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.