இந்த ஆண்டில் டுவிட்டர் டிரெண்டிங்கில் துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் பதிவுகள் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.
டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டுவிட்டர் பதிவுகள் சமூக வலைத்தளத்தில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. நம்பிக்கை மற்றும் எழுச்சியூட்டும் டுவீட்டுகளுடன் இந்த ஆண்டு நிறைவடைய இருக்கிறது. துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் பதிவுகள் இந்த ஆண்டில் டுவிட்டர் டிரெண்டிங்கில் பிரபலமடைந்து முன்னணி இடத்தை பெற்றுள்ளது.
உலகில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு சவால்கள் இருந்து வந்தாலும் துபாய் ஆட்சியாளரின் பதிவானது சிறப்பிடத்தை பெற்றது. அவர் அமீரகம் குறித்த தற்போதைய முன்னேற்ற பணிகள் மட்டுமல்லாது, கொள்கைகள், புதிய திட்டங்கள், முயற்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் தெரிவித்து வருகிறார். இது மட்டுமல்லாது தனது சிந்தனை கருத்துகள் மூலம் மக்களை அதிகம் ஈர்த்து வருகிறார்.
HHShkMohd என்ற துபாய் ஆட்சியாளரின் டுவிட்டர் கணக்கை ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டில் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் நடந்த வெடிபொருள் விபத்தில் பலர் தங்களது இன்னுயிரை இழந்தனர். மேலும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் பலியானவர்களுக்கு இரங்கலையும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் வெளியிட்டிருந்தார். இது அதிகமானவர்கள் பின் தொடரப்பட்டதுடன், மறு பதிவும் செய்யப்பட்டது.
மேலும் எக்ஸ்போ 2020, அரசுத்துறையின் சேவைகளை மதிப்பீடு செய்யும் ‘செயலி’ குறித்த தகவல், ஒரு கோடி பேருக்கு உணவளிக்கும் திட்டம், புதிய மீடியா அகாடமி, முகம்மது பின் ராஷித் மருத்துவ ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் தனது டுவிட்டர் பதிவில் துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார். அமீரகத்தின் ஹோப் விண்கலம், விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி, 2-வது அமீரக செயற்கைகோள் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி திட்டப்பணிகள் குறித்தும் அவர் பதிவிட தவறவில்லை.
தற்போது நடந்து வரும் ‘ஜீடெக்ஸ்’ தொழில்நுட்ப வாரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருவதன் மூலம் துபாய் ஆட்சியாளரின் டுவிட்டர் பதிவு அமீரகம் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரக அரசின் டுவிட்டர் பக்கம், துபாய் போலீஸ், துபாய் ஊடக அலுவலகம், அமீரக உள்துறை அமைச்சகம், அபுதாபி போலீஸ், துபாய் சுகாதார ஆணையம் உள்ளிட்டவற்றின் டுவிட்டர் பக்கங்களும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

