கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தத் தவறினால் போராட்டம் வெடிக்கும்- காரைதீவு தவிசாளர் எச்சரிக்கை

331 0

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தித் தரத் தவறுகின்ற பட்சத்தில் அதைப் பெறுவதற்கான போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்ட கணக்காளர் கடந்த வாரம் கடமைக்கு வந்திருந்தார். பின்னர் அவரைக் காணக் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது தவிசாளர் ஜெயசிறில் மேலும் தெரிவித்தவை வருமாறு;

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெற வேண்டும் என்பது நாடளாவிய எமது தமிழ் மக்கள் அனைவரதும் ஒருமித்த நீண்ட கால அபிலாஷை ஆகும். இப்பிரதேச செயலகம் அரசாங்கத்தால் தரம் உயர்த்தி தரப்படுவதற்கு கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இனவாத அரசியல்வாதிகளே தொடர்ந்தேச்சையாக பல வழிகளிலும் முட்டுக்கட்டைகள் போட்ட வண்ணம் உள்ளனர்.

இப்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெறுவதற்கான பிரமாண்டமான மக்கள் எழுச்சி போராட்டம் கடந்த வருடம் இடம்பெற்றது. இதில் பங்கெடுத்தவன் என்கிற உரிமை, பெருமை ஆகியன எனக்கும் இருக்கின்றது. அப்போதைய அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தருவதாக உறுதிமொழி வழங்கியது. கால அவகாசம் பெற்றுக் கொண்டது. ஆனால் அதன் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்ஷக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நிச்சயமாக தரம் உயர்த்தி தருவார்கள் என்று பகிரங்க வாக்குறுதிகள் வழங்கினர். குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்முனை தமிழ் மக்களுக்கு இதற்கான உறுதிமொழியை நேரடியாகவே வழங்கினார். அவ்வாக்குறுதியை வழங்கி கல்முனை தமிழ் மக்கள் அத்தேர்தலில் 7000 வாக்குகளை ராஜபக்ஷக்களுக்கு வழங்கினர்.

கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தின் ஆதரவு சக்தியாக உள்ள கருணா அம்மான் என்று சொல்லப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ராஜபக்ஷ அரசாங்கத்தில் தரம் உயர்த்தி தரப்படும் என்பது உட்பட ஏராளமான வாக்குறுதிகளை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு அள்ளி வழங்கினார். அவருக்கு எமது மக்களின் 30,000 வாக்குகள் கிடைத்தன. ஆனால் எமது மக்களுக்கு எவையுமே கிடைக்கவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக அவரால் எதுவுமே நடக்கவில்லை.

ராஜபக்ஷ அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நப்பாசை இன்னமும் எமக்கு இருக்கின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவைத் தீர்மானம் மூலம் கணக்காளர் நியமிக்கப்பட்டு கடமைக்கு வந்தமை எமக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால் அம்மகிழ்ச்சி நீடிக்கவே இல்லை. அந்நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என அறிகின்றோம்.

இனவாத அரசியல்வாதிகள் மீண்டும் முட்டுக்கட்டைகள் போட்டு விட்டனர். கல்முனை பிரதேசத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணங்கி நடப்பதாக நாடகம் போடுகின்றனர். ஆயினும் அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் இப்பிரதேச செயலகம் தொடர்பாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஆயினும் கருணா போன்றவர்களைப் போல் அல்லாமல் எப்போதும் இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தர வேண்டும் என்று அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே வருகின்றது. சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைத்துள்ளார். சாணக்கியன் எம்.பி., கலையரசன் எம்.பி. ஆகியோர் உரையாற்றியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டும். இது எமது மக்களின் உரிமை ஆகும். மாறாக இது எமது மக்கள் கேட்கின்ற சலுகை அல்ல. 29 கிராம சேவையாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டியது அரசாங்கத்தின் கடமையே ஆகும். ஆனால் அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தரத் தவறினால் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும், அது கொரோனாவுக்குப் பின்னர் நடக்கும்.