கிழக்கு மாகாண தாதியர் பிரச்சினைகளுக்குத் தீர்வு

252 0

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு, மாகாணத்தில் சுகாதார வைத்திய சேவையை மேம்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு  தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பட்டம் பெற்ற தாதியர் உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வைப் கொடுத்தல், கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற வெளி மாகாணத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் இடமாற்றத்தை சாதகமான முறையில் அணுகுதல், தாதியர்  ஆளணி பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்  கிழக்கு மாகாண சுகாதார வைத்திய அதிகாரி  உத்தியோகத்தர்களுக்கும்  இடையே நேற்று (02) இரவு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே, இந்த தீர்மானங்கள்  எடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பில், கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யகம்பத், செயலாளர் மதநாயக்க, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.லதாகரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து, அகில இலங்கை அரசாங்க தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் உப தலைவரும் கிழக்கு மாகாண தலைவருமான பக்கீர் முகைதீன் நசூர்தீன், “கொரோனா அச்ச நிலையிலும் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தியாகங்கருக்கு மத்தியில் கடமையாற்றி வரும்  தாதியர் உத்தியோகத்தர்களின் மனிதாபிமானதும்  நியாயமான சில கோரிக்கைகளை முன்வைத்து, டிசெம்பர் 1ஆம் திகதி ஒரு நாள் அடையாள பணி  வேலை நிறுத்தத்தை  மேற்கொள்வதற்கு தீர்மானித்திருந்தோம். எனினும் ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று அதனைக்  கைவிட்டு, இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோம்.

இதன்போது, எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உறுதிமொழி அளிக்கப்பட்டது” என்றார்.