சிறிலங்கா முழுவதும் கொரோனா தொற்றுப் பிரதேசமாக சிறிலங்கா அரசு பிரகடனம்!

213 0

சிறிலங்காமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனரென தெரிவித்துள்ள அவர், கடந்த 24 மணித்தியாலங்களில் சுகாதார வழிமுறைகளை மீறி செயற்பட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை பொலிஸ் நிர்வாகப் பிரிவில் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நீக்கப்பட்டுள்ள நிலையிலும் அங்கு மெனிங் சந்தை, நாலாம் குறுக்குத்தெரு, ஐந்தாம் குறுக்குத்தெரு பகுதியிலுள்ள மொத்த விற்பனை நிலையங்களை திறப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதேபோன்று சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்கள் சிறிலங்கா ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.