அபுதாபியில் இருந்து துபாய்க்கு பாலைவன ஒட்டக பயணம்

226 0

அபுதாபியில் இருந்து துபாய்க்கு தொடங்கிய பாலைவன ஒட்டக பயணம் வருகிற 8-ந் தேதி துபாய் குளோபல் வில்லேஜில் நிறைவடைகிறது.

துபாய் ஹம்தான் பின் முகம்மது பாரம்பரிய மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அமீரகம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பாலைவன அனுபவத்தை பெறும் வகையில் ஒட்டக பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அமீரகத்தின் 49-வது தேசிய தினத்தையொட்டி இந்த ஒட்டக பயணம் 7-வது ஆண்டாக அபுதாபியின் லிவா பாலைவன பகுதியில் தொடங்கியுள்ளது.

10 நாட்கள் பாலைவனம் வழியாக நடைபெறும் இந்த பயணம் வருகிற 8-ந் தேதி துபாய் குளோபல் வில்லேஜில் அமைந்துள்ள பாரம்பரிய கிராமத்தில் நிறைவடைகிறது. இந்த பாலைவன பயணத்தின் மொத்த தூரம் 550 கிலோ மீட்டர் ஆகும். பாலைவன ஒட்டக பயணத்தில் அமீரகம், செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 11 பேர் பங்கேற்று உள்ளனர்.

இது குறித்து துபாய் ஹம்தான் பின் முகம்மது பாரம்பரிய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது உள்ள நவீன தொழில்நுட்ப யுகத்தில் அமீரகத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த ஒட்டக பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலைவனத்தின் கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகத்தின் மூலம் அமீரக பாலைவனத்தின் அனுபவத்தை இந்த பயணத்தில் பங்கேற்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் முதலில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கலந்து கொள்பவர்களின் உடல் நலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதன்பிறகு இந்த பயணத்தில் பங்கேற்பவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதையடுத்து அவர்களுக்கு பாலைவனத்தில் ஒட்டகத்தின் மூலம் பயணம் செய்யக்கூடிய வகையில் போதுமான பயிற்சி வழங்கப்படுகிறது. பாலைவனத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப எவ்வாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அனுபவமும் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒட்டக பயணம் மிகவும் பிரபலமாகி வருகிறது.

அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்க விரும்புவது குறிப்பிடத்தக்கது. பயணத்தில் பங்கேற்பவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, மருத்துவ வசதிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.