சர்வதேச அரங்கில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன்

315 0

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி  5 விக்கெட் இழப்பிற்கு 302- ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63  ரன்கள், ஜடேஜா 66 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதையடுத்து 303-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலிய 303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. பும்ராவுடன் டி நடராஜன் பந்து வீச்சை தொடங்கினார். ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்கார‌ர் மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட்டை தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றி உள்ளார்.

தனது 3-ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் விக்கெட்டை வீழ்த்தி நடராஜன் அசத்தியுள்ளார். 11 ஓவரில் 56 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது.