நுவரெலியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா- பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

270 0

நுவரெலியா- பொகவந்தலாவ சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், 6பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம், பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டம், பொகவந்தலாவ பொகவான தோட்டம், பொகவந்தலாவ மோர ஆகிய தோட்டங்களை சேர்ந்த 52, 32, 21, 26  ஆகிய வயதுடையவர்களே கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த 6பேரையும் கொரோனா சிகிச்சை முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான மேற்படி 6பேரும் கொழும்பு- புறக்கோட்டை, புளுமென்டல், பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து கடந்த 17ம் திகதி தமது வீடுகளுக்கு வருகை தந்துள்ளனர்.

அந்தவகையில் கொழும்பிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வருகை தந்தவர்களிடம் கடந்த 24ஆம் திகதி எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட 46 பேரிடம் மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை, நேற்று (வியாழக்கிழமை)  வெளியானதனை தொடர்ந்து, இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த பகுதியிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என ஹற்றன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பினை பேணிய குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.