எரியும்போது எவன் ம__ரைப் புடுங்கப் போனீங்க? – புகழேந்தி தங்கராஜ்

467 0

ingulab-2ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்பதா எண்பதா என்பது இப்போது மறந்துபோய் விட்டது. என்றாலும் சென்னை மத்திய சிறையில் கை ஒட்டாமல் கைதட்டக் கற்றுக்கொடுத்த அந்த உண்மையான மனிதரின் அதிராத சிரிப்பும் அவரது கண்களின் வழியே வழிந்த சிநேகபாவமும் அச்சு அசலாக நினைவிருக்கிறது இப்போதும்! அவர் மக்கள் பாவலர் இன்குலாப்.

அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தால் கல்லூரிகள் இயங்கமுடியாத நிலை. சென்னையின் அனைத்துக் கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர் அமைப்புகளைத் திரட்டி ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அவர்களது சிறைநிரப்பும் போராட்டத்தில் கலந்துகொண்டு 16 மாணவர்கள் கைதாகிறோம். சென்னை மத்திய சிறையில் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் இருந்த பழைய சிறைச்சாலை) ஆசிரியர்களுடன் சேர்த்து சிறைவைக்கப்படுகிறோம்.

அந்தச் சிறை அனுபவம் என் வாழ்வில் மறக்க இயலாத அத்தியாயம். இன்குலாப் சுப.வீரபாண்டியன் குருவிக்கரம்பை என்று நாங்கள் பெரிதும் மதித்த பல பேராசிரியர்களுடன் பழகக் கிடைத்த அரிய சந்தர்ப்பம். கைதான பேராசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள். நாங்கள் வெறும் 16 பேர். எல்லாப் பேராசிரியர்களுமே எங்களுடன் நட்புடன் பழகினர். கைதிகளுக்குண்டான அரிசி பருப்பு ஒதுக்கீட்டை வாங்கி தாங்களே சமைத்துப் பரிவுடன் பரிமாறினர். அதையெல்லாம் விவரிக்க இடம் போதாது.

சிறையில் ஒவ்வொரு நொடியையும் அர்த்தமுள்ளதாக ஆக்க இன்குலாப் முதலான பேராசிரியர்கள் திட்டமிட்டனர். ஒருநாள் கவியரங்கம் ஒருநாள் கருத்தரங்கம் ஒருநாள் கபடி போட்டி ஒருநாள் பேச்சுப் போட்டி என்று அவர்களது பட்டியல் சுவாரஸ்யமாக நீண்டது.

முதல் நிகழ்ச்சி கவியரங்கம் தான். இரண்டாவது நாள் மதிய உணவுக்குப் பின் இன்குலாபின் அறிமுக உரையுடன் கவியரங்கம் தொடங்கியது. முதல் முதலில் படிக்கப்பட்ட கவிதையே மனத்தை அள்ள மாணவர்களாகிய நாங்கள் கைதட்ட பேராசிரியர்களும் கைதட்ட தடதடவென்று ஒரு கும்பலே ஓடிவரும் சத்தம் கேட்டது. அப்படி ஓடிவந்தவர்கள் சிறைக் காவலர்கள். அவர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டனர்.

சிறை அதிகாரி ஒருவர் ஓடிவந்து சிறையில் கைதட்டக் கூடாது என்கிற நடத்தை விதியை விளக்கினார். கைதட்டினால் இப்படியெல்லாம் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க முடியாது என்றார். முதல் முறை என்பதால் எங்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை

அந்த அதிகாரி போனதும் இன்குலாப் மீண்டும் பேசினார். நல்ல கவிதைகளைக் கைதட்டிப் பாராட்டுவது நமக்குப் பழகிவிட்டதைக் குறிப்பிட்டார். அதேசமயம் சிறை விதிகளை மதித்தாக வேண்டும் என்றார்.

சிறைவிதியையும் மதிக்க வேண்டும் கவிதையையும் பாராட்ட வேண்டும் – என்று சொன்ன இன்குலாப் அதற்கான வழியையும் சொன்னார். கைதட்டுவதற்காக இரண்டு கைகளையும் நெருக்கமாகக் கொண்டுவருகிறோமில்லையா……… அவை ஒன்றில் ஒன்று பதியும் முன்பாகவே நிறுத்திவிட வேண்டும் என்றார். மீண்டும் மீண்டும் அப்படிச் செய்வது கைதட்டல் ஒலியைப் போலவே உற்சாகமூட்டும் என்பது அவரது யோசனை.

இன்குலாப் சொன்ன யோசனைப்படி அத்தனைப் பேரும் செய்துபார்த்தோம். இரண்டு கைகளும் ஒன்றில் ஒன்று பதியும் முன்பே நிறுத்தி மீண்டும் மீண்டும் அதே மாதிரி செய்தோம். அக்கார்டியன் வாசிப்பதைப் போல வினோதமாக இருந்தது. கவிதை படிக்கிற கவிஞருக்கு நாம் பாராட்டுகிறோம் என்பதை உணரவும் முடிந்தது….. அதே சமயம் கைதட்டுகிற சத்தமும் எழவில்லை.

இன்குலாப் டெக்னாலஜியை மீண்டும் மீண்டும் பயன்படுத்திப் பார்க்கிற ஆர்வத்தில் சுமாராக இருந்த சில கவிதைகளுக்குக் கூட
கை ஒட்டாமல் கைதட்டிக் கொண்டிருந்த அந்த இனியபொழுது இப்போது கூட எப்போதேனும் என் கண்முன் விரிவதுண்டு.

நேர்மை – ஒழுக்கம் – அறச்சீற்றம் ஆகியவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சமரசமற்ற போராளியான எங்கள் பேராசிரியர் இரா.இளவரசு மூலம் புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்த இன்குலாப் எனக்கு ஏற்கெனவே அறிமுகம். என்றாலும் நேரடியாகப் பழகுகிற வாய்ப்பை சிறைதான் கொடுத்தது.

இன்குலாபின் ‘மனுஷங்கடா’ பாடலுக்கு ‘இன்குலாபின் பாடல்’ என்பதைவிட ‘மக்கள் பாடல்’ என்பதுதான் அப்போதே அடையாளம். அந்த அளவுக்கு உழைக்கும் மக்களின் குரலாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தது அது. எண்பதுகளில் பாட்டாளி மக்களின் உரிமைகீதம் அதுதான்! அப்போது மட்டுமில்லைஇ இப்போதும்!

1968ல் தமிழகத்தின் கீழவெண்மணியில் தங்களது இரக்கமற்ற எஜமானர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாயக் கூலிகளான தலித் சகோதரர்களின் உள்ளக் குமுறலாகவே ஒலித்தது – ஒலிக்கிறது – ‘மனுஷங்கடா’ – இன்றுவரை!

‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப்போல அவனப் போல எட்டு சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா!
எங்களோட மானம் என்ன தெருவுல கிடக்கா – உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா…’
என்று கோபாவேசத்துடன் தொடங்குகிற இன்குலாபின் பாடல் முடிவடைவதற்குள் கொழுந்துவிட்டு எரிகிறது.
‘சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில வேகுது – உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணெயை ஊத்துது
எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க – நாங்க
எரியும் போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க – டேய்…
மனுசங்கடா நாங்க மனுசங்கடா…’
என்கிற இன்குலாபின் தமிழ் ஆண்டைகள் வைத்த நெருப்பையே தீக்கிரையாக்குகிற அசுரத் தமிழ்.

நாங்க எரியும் போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க – என்கிற வரிகளைப் பாடுகிறபோது குணசேகரனின் குரல் மட்டுமில்லை அதைப் பாடிய ஒவ்வொருவரின் குரலும் எரியும் நெருப்பில் வெடித்துச் சிதறுகிற வைரம் பாய்ந்த மூங்கிலின் ஒலியைப் போலவே வெடித்துச் சிதறியதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

தேசிய கீதத்துக்கும் ‘மனுசங்கடா’ என்கிற மக்கள் எழுச்சிப் பாடலுக்கும் இருக்கிற வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான்! அதைக் கேட்டு எழுந்து நிற்க வேண்டும் என்று உத்தரவு போட வேண்டியிருக்கிறது. இதுவோ தலைமுறை தலைமுறையாகச் சுரண்டப்பட்டு துவண்டுபோய்க் கிடக்கிற இந்த மண்ணின் நிஜமான எஜமானர்களை நிமிர்ந்து எழுந்து நிற்க வைக்கிறது.

என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘விலக மறுத்த வெளிச்சம்’ (1983) நூலுக்கான அணிந்துரையில் எது தேசப்பற்று எது முற்போக்கு – என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கியிருந்தார் இன்குலாப். முக்கியத்துவம் கருதி அதன் ஒரு பகுதியை இங்கே தரவேண்டியிருக்கிறது.

‘முற்போக்கு முத்திரை குத்திக்கொண்ட கவிஞர்களுக்கு இன்றைய ரஷ்யாவைப் பாராட்டாமல் விடுவது பெரிய இலக்கியக் குறைபாடாகத் தோன்றுகிறது. ‘தேசப்பற்று என்பது ரஷ்யாவை நேசிப்பதுதான்’ என்று முழங்குகிற முற்போக்கு மனிதாபிமானிகளும் இலக்கிய உலகில் உண்டு…….

தேசப்பற்று என்பது ரஷ்யாவையோ சீனாவையோ அமெரிக்காவையோ நேசிப்பது அல்ல! தேசப்படத்துக்கு பூசைபோடுவதும் தேசியக் கொடிக்கு மரியாதை காட்டுவதும் அல்ல!

நாட்டின் மேம்பாட்டுக்காக இரத்தத்தை வேர்வையாகக் கொட்டிப் பாடுபடும் மக்களை நேசிப்பதுதான் தேசப்பற்று. இந்த மக்களுடைய உழைப்பை அபகரிக்கும் கை வாஷிங்டனிலிருந்து நீண்டாலும் மாஸ்கோவிலிருந்து நீண்டாலும் எதிர்ப்பதுதான் முற்போக்கு’….

தேசப் பற்றுக்கும் முற்போக்குக்கும் இதைவிடச் சிறந்த விளக்கம் வேறென்ன இருக்க முடியும்?

தமிழகத்திலும் இந்தியாவிலும் ஒடுக்கப்பட்டு முடக்கப்பட்டுக் கிடக்கும் மக்களை எழுப்பச் சீறிப்பாய்ந்த இன்குலாபின் குரல்இ கடலின் மறுபுறம் அடக்கப்பட்டு நசுக்கப்பட்ட தமிழினத்துக்காகவும் ஓர்மத்துடன் ஒலித்தது. ஈழ விடுதலையை எவராலும் தடுக்க முடியாது – என்கிற அழுத்தமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஈழ மண்ணில் அவருடன் பயணம் மேற்கொண்ட ஒவ்வொரு நொடியும்இ என்னால் அதை முழுமையாக உணர முடிந்தது.

கொடுமையான கூட்டுப் பாலியல் வன்முறைக்குப் பிறகு கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பிள்ளை கிருஷாந்தி குமாரசாமியும் அவளைத் தேடிய ‘குற்றத்துக்காகவே’ கொல்லப்பட்ட அவளது தாய் சகோதரன் மற்றும் பக்கத்துவீட்டுக்காரரும் புதைக்கப்பட்ட செம்மணி வெளியில் நின்றபோது அதுவரை உற்சாகமாகப் பேசிக்கொண்டு வந்த இன்குலாப் என்கிற மக்கள் கவிஞன் எப்படி மௌனித்துப் போனான் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

2009 பிப்ரவரி என்று நினைக்கிறேன். ஈழத்தில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த நிலையில் இன்குலாப் ஒரு கவிதை எழுதியிருந்தார். ‘குருதி உடுத்தி வலம் வருகிறாள் விடுதலை’ என்று தொடங்குகிறது அந்தக் கவிதை.

அந்தக் கவிதையின் வாயிலாக வன்னி மண்ணுக்கு அவர் தெரிவித்திருந்த செய்தி ஆழமானது.
‘விரல் துடைக்கும்
நீள்கின்ற கண்ணீரின் கோடுகளை!
விழி பொசுக்கும்
உடன் பிறந்த துரோகத்தின் காடுகளை!
நுரை சிவக்கும் கடல் அலையே
மறு கரைக்குச் சொல்….
நொறுங்காது தமிழீழம்
புலிப்படை தான் வெல்லும்’….

கூலிக்கு மாரடிக்கிற கவிஞர்கள் கூட்டம் தான் அதிகம் தமிழ்நாட்டில்! வருவாயும் விருதுகளும் மட்டுமே அவர்களது இலக்கு. இன்குலாப் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு. தானறிந்த தமிழை தான் நேசித்த மெய்யான கொள்கைகளை வலுப்படுத்த மட்டுமே பயன்படுத்தினார். எவருக்கும் அஞ்சாமல் எழுதினார். ஆட்சியாளர்களுக்கு அஞ்சாமல் முடிவெடுத்தார். ‘ஈழத் தமிழருக்குத் துரோகம் செய்கிற ஒரு அரசு கொடுத்த கலைமாமணி விருது எனக்கெதற்கு’ என்று நிராகரித்தார்.

தன் நிலையிலிருந்து இன்குலாப் ஒருபோதும் தடம்புரண்டதில்லை. தனக்கென அவர் தேர்ந்தெடுத்த பாதை கரடுமுரடானது. விரும்பித் தேர்ந்தெடுத்த அந்தப் பாதையில் இன்முகத்துடன் இயங்கிக் கொண்டிருந்தார்.

பேசுகிற எழுதுகிற வார்த்தைகளை வாழ்க்கையாகவும் அமைத்துக் கொள்கிற நேர்மைமிக்க நெஞ்சுரம் இன்குலாபுக்கு இருந்தது. சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் அவர் முதலில் வசித்த வீட்டுக்கும் அதன்பின் ஜானி ஜான் கான் சாலை வீட்டுக்கும் சென்றபோதெல்லாம் ஒரு லட்சியவாதி எப்படி வாழவேண்டும் என்பதைக் கண்ணெதிரில் பார்த்திருக்கிறேன். அந்த அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன்.

‘தப்புன்னா கொஞ்சம் குறைச்சிக்கிட்டுக் கொடுக்க வேண்டியதுதானே’ என்று தட்டேந்தி நின்ற தருமிகளைப் போன்ற புலவர் பெருமக்களுக்கிடையே அரசனின் குற்றத்தை செவுளில் அறைவதைப் போல் தட்டிக்கேட்ட கவிஞர்கள் எல்லாக் காலக்கட்டத்திலும் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றனர். அந்த மரபின் தொடர்ச்சிதான் இன்குலாப்.

ஈழத்தில் தமிழினப்படுகொலை நடந்து முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு அந்தக் கொடுமையின் தொடர்ச்சியாக இன்னொரு கொடுமை அரங்கேறியது. அதைத் தோலுரிக்கிற விதத்தில் கொதித்துப் போய் இன்குலாப் எழுதிய ஒரு கவிதையைப் படித்ததும் நெகிழ்ந்துபோய் அலைபேசியில் அழைத்தேன். ‘மக்களுக்கான பணியை எந்தக் கட்டத்திலும் விட்டுவிடக் கூடாது’ என்று எனக்கு அறிவுரை சொன்னார்.

இன்குலாபின் அந்தக் கவிதையை நாம் ஒவ்வொருவரும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

‘தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப் பலகையிலிருந்தும்….
அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச் சாய்ந்து கிடக்கிற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்
விலகி
வெகுதொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதிகொட்டும் செம்மொழியாய்’
என்று இன்குலாப் என்கிற நிஜமான மனிதன் சமரசமற்ற தமிழன் எந்த சந்தர்ப்பத்தில் எழுதினான் என்பதை இப்போது நினைக்கையிலும் மெய் சிலிர்க்கிறது.

அதைப் பற்றி விரிவாகப் பேசவேண்டும் அடுத்த கட்டுரையில்…