செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 20 அடியை தாண்டியது

406 0

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 20 அடியை தாண்டியதால் எந்த நேரத்தில் நிரம்பலாம் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம், கிருஷ்ணா நதிநீர் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி. ஆனால் ஏரியின் பாதுகாப்பு கருதி 21 அடியை தொட்டவுடன் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

தற்போது தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீரின் வருகையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.13 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியில் தற்போது உள்ள நீரின் கொள்ளளவு 2,636 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர் வரத்து 390 கனஅடியாகவும் உள்ளது.
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி எந்த நேரத்திலும் நிரம்பலாம் என்பதால் தொடர்ந்து ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அடிக்கடி ஏரியின் நீர்மட்டத்தையும் அளவீடு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் ஏரிக்கு செல்லும் அனைத்து இரும்பு கதவுகளும் பூட்டப்பட்டுள்ளது. சிலர் ஆர்வம் மிகுதியால் அதனையும் தாண்டி நிரம்பி உள்ள ஏரியை பார்த்துவிட்டு செல்கின்றனர். போலீசாரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏரி 21 அடியை எட்டிவிட்டால் உபரி நீர் திறந்து விடப்படும்போது எந்த தடங்களும் இல்லாமல் இருக்க மதகுகள் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மழை தொடர்ந்து பெய்வதாலும், கிருஷ்ணா நதிநீர் வருகையினாலும் இந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது சற்று உறுதியாகி உள்ளது. ஏரிக்கு வரும் நீரின் அளவை பொறுத்து இது மாறுபடலாம். ஏரியில் நீர் நிறைந்து காணப்படுவதால் அடுத்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நள்ளிரவில் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக பொதுமக்களுக்கு முறையான அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.